TN Rain Alert: மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை, 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை நிலவரம்
TN Rain Alert: மதுரையில் கொட்டி தீர்த்த கனமழையை தொடர்ந்து, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
TN Rain Alert: தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தத்தளிக்கும் மதுரை:
மதுரை மாவட்டம் முழுவதிலும் நேற்று மதியம் முதல் மாலை வரை மூன்று மணி நேரத்திற்கு மேலாக திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. குறைந்த நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைடால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
செல்லூர் பகுதியில் உள்ள வீடுகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் சூழ்ந்தது. பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிவிட்டு பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மதுரை மாநகராட்சி 10ஆவது வார்டு பகுதியான பாரத் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளுக்குள் முழுவதிலும் மழை நீர்சென்று குடியிருப்புகள் மூழ்கியது. ஒவ்வொரு பகுதிகளிலும் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கிய நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகினர். இதேபோன்று பாரத் நகர் பகுதியில் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதிலும் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் மூழ்கடித்தது. பொதுமக்கள் உடமைகள் நீரில் மூழ்கி வீணான நிலையில், இரவு முழுவதும் தங்க இடமின்றி தவித்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தி மற்றும் எம்.பி., சு. வெங்கடேசன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
மதுரை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக மதுரை கிழக்கு, மதுரை வடக்கு வருவாய் வட்டங்களுக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக நெல்லை மற்றும் தேனி மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை:
26.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
27.10.2024 முதல் 31.10.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை&புறநகர் பகுதிகளுக்கான வானிலை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.