Salem Chengapalli 6 lane NH 544: சேலம் டூ செங்கப்பள்ளி - 102.5 கிமீ நீளம், 110 கிமீ வேகம் - 6 வழிச்சாலை அப்கிரேட் எப்போது?
Salem Chengapalli 6 lane NH 544: சேலம் முதல் செங்கப்பள்ளி வரையிலான நான்கு வழிச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டால், மணிக்கு 110 கிமீ வேகத்தில் அந்த சாலையில் பயணிக்கலாம்.

Salem Chengapalli 6 lane NH 544: சேலம் முதல் செங்கப்பள்ளி வரையிலான நான்கு வழிச்சாலையை மேம்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை நீண்ட நாட்களாகவே நிலுவையில் உள்ளது.
சேலம் - செங்கப்பள்ளி 6 வழிச்சாலை திட்டம்:
கொங்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சேலம் முதல் செங்கப்பள்ளி வரையிலான சாலை மிகவும் முக்கியமானதாகும். காரணம் இந்த நான்கு வழிச்சாலையானது சேலம் - கொச்சி நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும். கேரளாவிற்கு உள்நாட்டு வேளாண் மற்றும் கோழி ஏற்றுமதி இந்த நெடுஞ்சாலை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது. 20,000க்கும் மேற்பட்ட மல்டி ஆக்சில் வாகனங்கள் மற்றும் அதிகமான உள்நாட்டு வாகனங்கள் கோயம்புத்துாரை அடைகின்றன. பல்வேறு கல்வி நிறுவனங்கள் வாகனங்களை இந்த சாலையில் இயக்கி வருகின்றன. மொத்தமாக நாளொன்றிற்கு சுமார் 30 ஆயிரம் வாகனங்கள் இந்த சாலை வழியே பயணிக்கின்றன.
அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்:
அத்தியாவசியம் தொடங்கி தினசரி பயன்பாடு வரை இந்த சாலையின் பயன்பாடு, கொங்கு மண்டல மக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. இதன் காரணமாகவே நாளுக்கு நாள் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து அதிகரித்து வருவதுடன், பெரிய விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. சராசரியாக ஒவ்வொரு வாகனமும் குறைந்தபட்சம், 30 முதல், 45 நிமிடம் வரை வழக்கமான நேரத்தை காட்டிலும் தாமதமாக செல்கின்றன. எதிர்காலத்தில் இந்த சாலையின் பயன்பாடு, மேலும் அதிகரித்து போக்குவரத்து நெரிசலும் உயரக்கூடும். எனவே இதனை கருத்தில் கொண்டு சேலம் டூ செங்கப்பள்ளி 4 வழிச்சாலையை, 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
6 வழிச்சாலையாக விரிவாக்கம்?
சேலம் - செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 544 இன் மொத்த நீளம் 102.5 கி.மீ நீளமாகும். இந்த சாலை சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரை கேரளாவின் பாலக்காடு, திருச்சூர் மற்றும் கொச்சியுடன் இணைக்கும் ஒரு முக்கியமான சாலையாகும். செங்கப்பள்ளி மற்றும் கோயம்புத்தூருக்கு இடையிலான நெடுஞ்சாலையின் 54 கி.மீ நீளம் ஏற்கனவே ஆறு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் செங்கப்பள்ளி முதல் சேலம் வரை மீதமுள்ள 102.5 கி.மீ நீளம் இன்னும் நான்கு வழிச்சாலையாகவே உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருள் நுகர்வு அதிகரிப்பதோடு, மிகையான கார்பன் வெளியேற்றத்தால் காற்று மாசுபாடும் உயர்வதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. எனவே இந்த சாலையை 6 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இந்த திட்டம் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டுமல்ல, வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்கவும் அவசியம் என கூறப்படுகிறது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால், அதிகபட்சம் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். இதனால், பயண நேரம் வெகுவாக குறையும்.
கொங்கு மண்டலத்தின் தொழில் முக்கியத்துவம்:
செங்கப்பள்ளி பகுதியானது சேலம் மற்றும் கோயம்புத்தூர் நெடுஞ்சாலை (NH 544) நடுவே, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய அடையாளமாகும் . இது ஜவுளித் தொழிலுக்குப் பிரபலமானது. கிட்டத்தட்ட 5000 பேர் தங்கள் வேலைவாய்ப்புக்காக பிற பகுதிகளிலிருந்து தினசரி அங்கு வந்து செல்கிறார்கள். செங்கப்பளியிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலேயே கோவை விமான நிலையமும், 15 கிமீ தூரத்திலேயே திருப்பூரில் ரயில் நிலையமும் உள்ளது. அதன்படி, செங்கப்பள்ளியின் புவியியல் இருப்பிடம், இரட்டை நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் திருப்பூருக்குச் செல்லும் பல நீண்ட தூரப் பயணிகளுக்கு ஒரு பிராந்திய மையமாக இருக்க உதவுகிறது. இதனை கருத்தில் கொண்டு சேலம் மற்றும் செங்கப்பள்ளி இடையேயான சாலையை 6 வழிச்சாலையாக மேம்படுத்துவது பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும்.
மத்திய அரசு நிறைவேற்றுமா?
சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை 544-ன் செங்கப்பள்ளி - பவானி பாதையில் இரண்டு வாகன சுரங்கப்பாதைகள் (VUPs) அமைக்கவும் கோரிக்கை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, சேலம் டூ செங்கப்பள்ளி சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டால், ஒவ்வொரு பயணத்திற்கும் கூடுதலாக செலவாகும் 3 முதல் 5 லிட்டர் எரிபொருள் மிச்சப்படுத்தப்படும். அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபடும் கட்டுப்படுத்தப்படும். இதுதொடர்பாக தமிழக எம்.பிக்கள் ராஜேஷ் குமார் மற்றும் சுப்ப்ராயன் ஆகியோர் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். போக்குவரத்து, தொழில்நுட்ப- பொருளாதார நம்பகத்தன்மை, நிதி இருப்பு மற்றும் இடை-முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில்.இந்த திட்டம் சாத்தியமானது எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதனை ஏற்று சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.





















