இன்று முதல் ‘ உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் அமல்.. நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த வட்டங்களில் தங்கி மக்களின் குறைகளை கேட்டறிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, இத்திட்டம் இன்று (31.01 2024) புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களை நேரடியாக சென்று சந்தித்து குறைகளை கேட்டறிவார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அவற்றைத் திறம்படச் செயல்படுத்தி, முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48, புதுமைப் பெண், முதலமைச்சரின் காலை உணவு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மக்களுக்காகத் தீட்டப்பட்டு அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட, இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை முன்னணி மாநிலமாக தலைநிமிரச் செய்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும் முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள். மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும் அன்றையதினம் மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துறை அலுவலர்கள் பொது மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டத்திற்கும் நியமிக்கப்பட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர்களிடம் மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கலாம். இந்த மனுக்களை ஆட்சியர்கள் பரிசீலனை செய்து அதற்கான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.