உள்ளாட்சி, ஊரகப்பகுதி சாலைகளை புதுப்பிக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!
தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக அடிப்படை வசதியான சாலை வசதியை மேற்கொள்வது உள்ளாட்சிகளில் திமுகவின் கையை ஓங்கச் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், உள்ளாட்சி, ஊரகப்பகுதி சாலைகளை புதுப்பிக்க தமிழக அரசு டெண்டர் கோரியிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களின் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த ஜனவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர், ஒன்றியக் கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என 4 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்.
ஆனால், மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
அதன்பின்னர் கொரோனா தொற்று, சட்டப்பேரவைத் தேர்தல் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போனது. அதேபோல், இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை நடைபெறாமல் இருந்தது. இதனாலும் தேர்தல் தள்ளிப்போனது.
இந்நிலையில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்த நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதால், தேர்தல் அறிவிப்பு தொடங்கி, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு என அனைத்துமே செப்டம்பர் 15க்குள் முடிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடுபிடி விதித்துள்ளது.
அரசு டெண்டர்:
இந்நிலையில்தான், உள்ளாட்சி, ஊரகப்பகுதி சாலைகளை புதுப்பிக்க தமிழக அரசு டெண்டர் கோரியிருக்கிறது. தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக அடிப்படை வசதியான சாலை வசதியை மேற்கொள்வது உள்ளாட்சிகளில் திமுகவின் கையை ஓங்கச் செய்யும் என்று கணிப்பட்டுள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலை ஒப்பிடுகையில் இம்முறை நடந்த நேரடி தேர்தல் முடிவுகளில் திமுக ஏற்றம் கண்டிருந்தது. இதனால், எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் கோலோச்சவே திமுக வியூகம் வகிக்கிறது.