All Party Meet on 6th: பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கான கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்க, வரும் 6-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து ஆலோசிக்க, வரும் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்
தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வரும் 6-ம் தேதி மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது. அதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஓர் ஆலோசனைக் கூட்டம் வரும் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகதில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், மூத்த அமைச்சர்களின் தலைமையில் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்
கரூரில் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுக் கூட்டங்கள், பரப்புரைகள், ரோடு ஷோ போன்றவற்றை நடத்துவதற்கு, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இச்சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான், தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் விதமாக, அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் வகையில், வரும் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.





















