Stalin Chairs VC's Meet: பல்கலைக்கழகங்களில் அதிரடி மாற்றங்கள்.? இன்று துணை வேந்தர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், இன்று மாலை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பல்கலைக்கழகங்களில் மாற்றங்களை கொண்டுவருவது, உயர்கல்வியை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளுக்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அரசிதழ்களாக வெளியிடப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு
துணை வேந்தர் நியமன அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, வேந்தருக்கான அதிகாரத்தை, ஆளுநருக்கு பதிலாக தமிழ்நாடு அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களை அரசே நியமிக்க அதிகாரம் உள்ளிட்ட சரத்துக்களை கொண்ட 10 மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, அந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், தனது தனி அதிகாரம் மூலம், 10 மசோதாக்களக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் முழு விவரங்கள், கடந்த 11-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானதையடுத்து, அனைத்து மசோதாக்களும் இரண்டு அரசிதழ்களாக வெளியிடப்பட்டன.
அதில், மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்பட்ட நாளான 2023 நவம்பர் 18-ம் தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும், சட்டத்தில் துணை வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என்று மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
அரசிதழில் வெளியிடப்பட்டதால், சட்டங்கள் அனைத்து அமலுக்கு வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை அரசு கூட்டியுள்ளது.
முதல் முறையாக முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம்
உச்சநீதிமன்ற தீர்ப்பு, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ள நிலையில், அந்த சட்டமும் அமலுக்கு வந்ததால், அதை செயல்படுத்தும் விதமாக, முதல் முறையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்கலைக்கழகங்களில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவருவது, உயர்கல்வியை மேம்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

