TN Bus Strike: நீதிபதி தந்த அட்வைஸ்! ஸ்டிரைக்கை தற்காலிகமாக திரும்ப பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்!
தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.
TN Bus Strike: தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்:
ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை விடுவிப்பு, பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை நள்ளிரவில் தொடங்கிய வேலை நிறுத்தம் இன்று வரை நடைபெற்றது.
கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. தொழிற்சங்கங்கள் சொன்ன 6 கோரிக்கைகள் 2 கோரிக்கைகளை மட்டுமே தற்போதைக்கு பரீசிலிக்க முடியும். மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது ஏற்கப்படவில்லை.
இதனால் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொமுச மற்றும் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. இதனால் அந்த சங்க ஊழியர்களை கொண்டும், தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை கொண்டும் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு:
இதனிடையே, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. - இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது தேவையற்றது.
ஆனால் போராட்டம் நடத்த உரிமையுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கலின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? நகரங்களில் மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்னை உள்ளது?” என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து அரசு பிற்பகலுக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
போராட்டம் தற்காலிக வாபஸ்:
மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஸ்ட்ரைக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க தலைமை நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சர் சிவசங்கர் சொல்வது என்ன?
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதற்கு வரவேற்கிறேன். முதல்வருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரி 19ஆம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.