TN Budget 2021-22: தமிழ்நாடு பட்ஜெட் 2021: என்னென்ன எதிர்பார்க்கலாம்?
தொழிற்துறைகளில் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி பாதிப்பு, வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என பல சிக்கல்களுக்கு இந்த பட்ஜெட் மூலம் தீர்வு கிடைக்குமா என மக்கள் புருவம் உயர்த்திக் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்ய இருக்கிறார். முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான கையடக்க டேப்(Tab) இயக்கும் பயிற்சிகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அரசு நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார். இதற்கிடையேதான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யவிருக்கிறது. விலைவாசி உயர்வு ஒருபக்கம் எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை சமன்படுத்த எந்தத் துறைகளில் கவனம் செலுத்தலாம் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று பேரிடருக்கு நடுவே தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் கொரோனா முதல் அலை பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதனால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி பாதிப்புகள், வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என பல்வேறு சிக்கல்களுக்கு இந்த பட்ஜெட் மூலம் தீர்வு கிடைக்குமா என மக்கள் புருவம் உயர்த்திக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அரசு தனது பட்ஜெட்டில் தொழில்துறை சார்ந்து அதிக கவன செலுத்த வேண்டும் என இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு தலைவர் டாக்டர் சந்திரகுமார் கருத்து கூறியுள்ளார். அவர்,’மாநில பட்ஜெட் பெருந்தொற்றினால் தொழிற்துறையில் ஏற்பட்டிருக்கும் பெரிய இழப்பை ஈடுகட்டுவதாக இருக்கவேண்டும்.உற்பத்திக்கான தேவைகளை உருவாக்குவது, முதலீட்டினை முடுக்கி விடுவது போன்றவற்றில் பட்ஜெட் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக, ரீடெய்ல், சுற்றுலா, ஜவுளித்துறை,விருந்தோம்பல் (Hospitality) உள்ளிட்ட பிரிவுகளில் கவனம் செலுத்துவது பொருளாதாரத்தை சீர் செய்ய உதவும் எனக் கூறியிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு குறிப்பாக வேலை மற்றும் வாழ்வாதாரத்தில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் நீண்டகால லாக்டவுன் நுகர்வோர் சேவையை பாதிக்கும் . இது குறித்த சர்வே ஒன்றை சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ளது. இதனை மறுசீரமைக்கும் வகையில் ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்துவது மற்றும் ஆற்றல் தொடர்பான வணிகத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றை அரசு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் ’அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தோடு மட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, தற்போதுள்ள சட்டங்களின் வரம்பிற்குள் வணிகங்களை ஊக்குவிக்க மின் விநியோகத்தை அரசாங்கம் பரவலாக்க வேண்டும். மற்றபடி சாலைபோக்குவரத்துடன் இணைக்கும் வகையிலான ரயில் விதிகளை வரையறுப்பது போக்குவரத்தை விரைவுபடுத்தும்’ என இந்திய வர்த்தக சபை மற்றும் தொழில் கூட்டமைப்பு அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் இளைய தலைமுறையினரில் தொழில்திறன் ஊக்குவிப்பிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். உள்ளூர் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் வகையில் குறிப்பாக தென் மாவட்ட மேம்பாட்டுக்காக அரசு தனது பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.