TN BJP: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கட்சி பதவிகள்.. அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்த தமிழிசை!
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் முழுமையாக திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் எந்த இடங்களிலும் வெற்றி பெறவில்லை.
அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை பல இடங்களில் கொண்டு சென்றுள்ளார் என முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் முழுமையாக திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் எந்த இடங்களிலும் வெற்றி பெறவில்லை. இதில் 2021 சட்டமன்ற தேர்தல் வரை கூட்டணியில் இருந்த அதிமுக, பாஜக பிரிந்ததே அக்கட்சிகளின் தோல்விக்கு காரணம் என இரு கட்சிகளையும் சார்ந்த சில தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். இதனை தென் சென்னை பாஜக வேட்பாளராக போட்டியிட்ட, முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜனும் ஆதரவு தெரிவித்தார்.
நேர்காணல் ஒன்றில், அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் 35 இடங்கள் வரை வென்றிருக்கலாம் எனவும், கள நிலவரமும் அதைத்தான் சொல்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் கூட்டணியை பொறுத்தவரை தேசிய தலைமை தான் முடிவு செய்யும். மாநில தலைவரான அண்ணாமலை அதனை சொல்ல முடியாது. 2026 தேர்தலில் கள நிலவரம் என்ன வேண்டுமானாலும் மாறலாம். திமுகவினர் அதிமுக, பாஜக வாக்குகள் பிரிந்ததால் வெற்றி பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் ஒரு முன்னாள் தலைவராக, இந்நாள் தலைவர் அண்ணாமலையில் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் அண்ணாமலைக்கு ரிப்போர்ட் கார்டு கொடுத்தால் தவறாகி விடும். அவர் சுறுசுறுப்பானவர். தமிழ்நாடு முழுவதும் யாத்திரை சென்றிருக்கிறார். கட்சியை பல இடங்களில் கொண்டு சென்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபலமடைந்துள்ளார். எங்களை போன்றவர்கள் எண்ணங்களின் படி கட்சியை கொண்டு சென்றுள்ளார். அதேசமயம் முன்னாள் மாநில தலைவராக என்னுடைய ஆசை என்னவென்றால் கட்சியின் கட்டமைப்பு, பூத் கமிட்டி செயல்பாடு, பிரதிநிகள் ஆகியவை வளர்ச்சியுடன் இருக்க வேண்டும். இதில் சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் முயற்சியும் செய்திருக்கலாம்.
எனக்கு ஒரு வருத்தம் உள்ளது. நான் தலைவராக இருந்தபோது சமூக விரோதிகள் மாதிரி யாராவது தெரிந்தால் நான் அவர்களை ஊக்குவிக்க மாட்டேன். சில மாவட்டங்களில் கட்சி பதவியில் இருப்பவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களை தவிர்த்து கட்சியில் கடினமாக உழைக்க கூடியவர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும். அண்ணாமலை நல்ல தலைவர் தான் .ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு முடிவுகள் இருக்கலாம். இதை அண்ணாமலையின் முடிவாக தான் பார்க்கிறேன்” என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.