Watch Video: வெள்ளத்தில் போட்டோ ஷூட் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை!
நாங்கள் அனைவரும் எளியவர்கள், பாஜகவில்தான் எளியவர்களுக்கு மதிப்பு என கூறுபவர்கள் படகை விட்டுக்கூட கீழே இறங்காமல் ஆய்வும், உதவியும் செய்கிறார்கள்.
சென்னயில் கடந்த இரண்டு நாள்களாக பெய்யும் மழையால் மக்கள் அவதியடைந்துள்ளனர். வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் இருந்தால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் 2015ஆம் ஆண்டு திரும்பிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவிவருகிறது..
மழை பாதிப்பை சரி செய்ய தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன்படி மழை பாதிப்பு சரியாகும்வரை மூன்று வேளையும் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொடர் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளை பல்வேறு அரசியல் கட்சியினர் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்துவருகின்றனர்.
அந்தவகையில் பாஜக சார்பிலும் இன்று ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின்போது பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையுடன் பாஜக பிரமுகர் கரு. நாகராஜனும் சென்றார்.
அவர்கள் அனைவரும் ஒரு படகை எடுத்துக்கொண்டு சென்றனர். அப்போது உடன் சென்றவர்களில் ஒருவர், “இவர்கள் எல்லாம் நிற்காத மாதிரி ஒரே ஒரு ஃபோட்டோ” என கூறிவிட்டு படகின் அருகில் இருந்தவர்களை இந்தப் பக்கம் வந்துவிடுங்கள் என கூறுகிறார். அதனை ஏற்றுக்கொண்ட அவர்களும் அங்கிருந்த நகர அண்ணாமலையும், நாகராஜனும் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அதற்கப்புறம் நடந்ததெல்லம் போட்டோஷூட் லாங்வேஜ் தான்.
இதனையடுத்து அங்கு நிற்கும் பெண் ஒருவரிடம் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை இருக்கும் மேலே சென்று தங்கிக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு, உடன் வந்தவர்களிடம் அந்தப் பெண்ணுக்கு பால் பாக்கெட்டும், மாவு பாக்கெட்டும் கொடுங்கள் என நாகராஜன் கூறுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
நாங்கள் அனைவரும் எளியவர்கள், பாஜகவில்தான் எளியவர்களுக்கு மதிப்பு என கூறுபவர்கள் படகை விட்டுக்கூட கீழே இறங்காமல் ஆய்வும், உதவியும் செய்கிறார்கள். அப்படி செய்யும் ஒரே கட்சி பாஜகதான். மக்கள் கடும் துன்பத்தில் இருக்கும் நேரத்தில் அங்கு சென்று அவர்கள் விளம்பர படம் எடுத்திருக்கிறார்கள் எனவும் நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர். அதுமட்டுமின்றி இப்படி நடந்துகொண்டால் மழை காலமோ, வெயில் காலமோ எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என்றும் கிண்டலடிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்