Annamalai: “கருணாநிதி என் அப்பா இல்ல; அப்படி இருந்தா ஜெயித்திருப்பேன்” - பாஜக தலைவர் அண்ணாமலை
நான் 2 முறை தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். ஆனால் இந்த தகுதி கூட இல்லாத அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியில் நீடிப்பது நல்லதல்ல என கனிமொழி தெரிவித்திருந்தார்.
மத்தியில் பாஜகவுக்கு கூட்டணி ஆட்சி என்பது புதிதல்ல, நாங்கள் அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை வழங்குவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு இம்முறை தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் பாஜகவுக்கு 240 மட்டுமே கிடைத்தது. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தொடர்ந்து 3வது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமையவுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்ட பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடன் தோற்றார். இப்படியான நிலையில் அண்ணாமலை தனது தேர்தல் பரப்புரையில் தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி.யான கனிமொழியை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். அப்போது கனிமொழிக்கு கருணாநிதி என்ற அடையாளத்தை தவிர எந்த தகுதி இருக்கிறது என்கிற ரீதியில் பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த கனிமொழி, நான் 2 முறை தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். ஆனால் இந்த தகுதி கூட இல்லாத அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியில் நீடிப்பது நல்லதல்ல என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பிறகு செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது, “எங்க அப்பா அரசியலில் இல்லை. அவர் பெயர் குப்புசாமி. விவசாயம் பண்ணுகிறார். எங்கப்பா பெயர் கருணாநிதி இல்லை. அவர் 6 முறை எம்.எல்.ஏ. இல்லை. எங்க அப்பா தோட்டத்தில் ஆடு, மாடு மேய்க்கிறார். அவருடைய பையன் நான் ஜெயிக்க நேரம் ஆகும். படிப்படியாக தான் ஜெயிக்க முடியும். எங்க அப்பா கருணாநிதியாக இருந்தால் நான் ஜெயித்திருக்க முடியும். நியாயம், நேர்மை, மெதுவாக சென்றால் ஒருநாள் நீ ஜெயிப்பாய் என எங்க அப்பா குப்புசாமி சொல்லி கொடுத்துள்ளார்.
கனிமொழி என்னை அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை கனிமொழி பாஜகவுக்கு வருகிற மாதிரி இருந்தால் நான் அதை பரிசீலனை பண்ணுகிறேன். மத்தியில் கூட்டணி ஆட்சி எங்களுக்கு புதியது அல்ல. வாஜ்பாய் காலத்தில் கூட்டணி ஆட்சியில் தான் இருந்தோம். இந்த முறை கூட்டணி கட்சிகள் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வருகிறார். அதனால் 5 ஆண்டுகள் சிறப்பான கூட்டணி ஆட்சியை கொடுக்க முடியும் என நம்புகிறோம். அதில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரும் எங்களுடைய கொள்கையுடன் இணைந்து துணை நிற்க போகிறார்கள். எனவே கூட்டணி ஆட்சி மிகத்திறமையாக சிறப்பாக நடத்தி காட்ட முடியும் என்பதை நரேந்திர மோடி நிரூபித்து காட்டுவார். கூட்டணி ஆட்சி என்பதால் தன்னுடைய தன்மையை பாஜக மாற்றிக் கொள்ளாது. 10 ஆண்டுகாலம் எப்படி இருந்ததோ அப்படியே தான் இருக்கும். எல்லோரையும் அரவணைத்து செய்த சாதனைகளை மீண்டும் செய்வோம்” என அண்ணாமலை கூறினார்.