சாலை விரிவாக்க பணிகள்: அதிர்ச்சி தகவல்! முடிக்காத பணியை முடித்ததாக ஆர்டிஐ மூலம் அம்பலம்
சாலை விரிவாக்க பணிகள் முடிவடையாமலயே பணிகள் முடிவடைந்து விட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த அதிர்ச்சி தகவல்.

திருவாரூரில் சாலை விரிவாக்க பணிகள் முடிவடையாமலயே பணிகள் முடிவடைந்து விட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிர்வாகம் பற்றி பலதரப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது. 2005ல் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின் மூலம் குடிமக்கள் அரசு ஆவணங்கள், வேலைகள் மற்றும் பிற பொதுத் தகவல்களைக் கோர முடியும்.
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலை, சென்னை கன்னியாகுமரி தொழிற் திட்டத்தின் மூலம் விரிவாக்கம் செய்யும் பணிக்காக கடந்த 30.09 2022 அன்று ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கி நில எடுப்பு உட்பட 221 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பூந்தோட்டம் வீரவாடி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத் என்பவர் இஞ்சிக்குடி முதல் ஒன்பது புள்ளி வரை 2.925 கிலோமீட்டர் சாலை விரிவாக்க பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் சாலையின் நீள அகலம் முழுமையான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 23 அன்று அவருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் வர பெற்றுள்ளது. அதில் முழுமையான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதா என்று அவர் எழுப்பிய கேள்விக்கு ஒப்பந்தத்தில் உள்ளவாறு பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வினோத் கூறுகையில், பல இடங்களில் முதற்கட்ட ஆக்கிரமிப்புகள் கூட அகற்றப்படாமலும் பணிகள் நிறைவடையாமலும் இருக்கிறது. ஆனால் இந்த பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தத் திட்டத்தில் 35 அடி அகலத்தில் சாலை அமைக்க வேண்டும் என்பதையும் முறையாக பின்பற்றாமல் இருப்பதாகவும் ஒன்பது புள்ளி போன்ற இடங்களில் முதற்கட்ட பணி கூட தொடங்கப்படாமல் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் இந்த பணிகளை முடிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.





















