20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு; அழகாக சொன்ன குழந்தைகள்
வள்ளுவரின் கருத்துக்களை வாழும் சமுதாயத்தினரும், வளரும் மாணவப் பருவத்தினரும் அறிய வேண்டும் என ஆவல் கொண்டவர் செங்குட்டுவன்.
அரவக்குறிச்சி அருகே உள்ள புத்தாம்பூர் பகுதியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு என அறிவிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கரூர்- மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருபவர் செங்குட்டுவன். வாழ்வியல் நாயகன் வள்ளுவர் பெருந்தகை வழங்கிய திருக்குறள்களில் உள்ள கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் செங்குட்டுவன். இதனால் தனது நிறுவனத்திற்கு வள்ளுவர் என பெயர் சூட்டி நடத்தி வருகிறார்.
அதேசமயம், வள்ளுவரின் கருத்துக்களை வாழும் சமுதாயத்தினரும், வளரும் மாணவப் பருவத்தினரும் அறிய வேண்டும் என ஆவல் கொண்டவர். வள்ளுவர் பிறந்த தினத்தில் வருடம் தோறும் 20 திருக்குறள்களை ஒப்புவித்து, அதற்கான விளக்கத்தையும் மாணவர்கள் கூறினால், அவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்குவதாக அறிவித்து துவக்கி உள்ளார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுடன், கரூரை அடுத்த மலைக்கோவிலூர் பகுதியில் செயல்படும் செங்குட்டுவன் நடத்தி வரும் பெட்ரோல் பங்கிற்கு சென்று, குறள்களை ஒப்புவித்து, பெட்ரோலை பரிசாக பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து வள்ளுவர் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தெரிவிக்கும் போது, வாழும் சமுதாயத்திற்கு வள்ளுவர் அளித்த குறள்களை மனப்பாடம் செய்வதை விட, மனதில் பாடமாக கொண்டால், ஒழுக்கமுள்ள சமுதாயம் அமைவதோடு ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றி பெறலாம்” எனத் தெரிவித்தார்.