அதிர்ச்சி சம்பவம்.. இசைக்குழுவான BTS மீது அதீத மோகம்! ரூ.14 ஆயிரத்துடன் கொரியா கிளம்பிய பள்ளி மாணவிகள்..
கொரியாவில் நடைபெற இருந்த பிடிஎஸ் இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி படிக்கும் மாணவிகள் கிளம்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இணைய உலகில் அதிக ரசிகர்களைப் பெற்று கோலோச்சி வருகிறது கொரிய இசைக்குழுவான பிடிஎஸ். இவர்கள் பிரபல யூடியூப் பக்கத்தில் ஒரு பாடலை வெளியிட்டால் கூட லைக்ஸுகளும், ஷேர்களும் குவியும். இன்றைய கால 2கே கிட்ஸ்களுக்கு இவர்களது இசை நிகழ்ச்சி, பாடல்கள் என்றால் கொள்ளை பிரியம். மேலும், இந்த பிடிஎஸ் குழுவிற்கு ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகம். இவர்களின் நிகழ்ச்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள்.
இப்படியான சூழ்நிலையில், கொரியாவில் நடைபெற இருந்த பிடிஎஸ் இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி படிக்கும் மாணவிகள் வெறும் 14 ஆயிரம் ரூபாயுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து கொரியாவிற்கு கடல் மார்க்கமாக கிளம்ப திட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது..?
கொரிய பாப் இசை குழுவான பிடிஎஸ் நிகழ்ச்சியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற நம்பிக்கை 13 வயதுடைய 3 சிறுமிகள் வேலூரை அடுத்த காட்பாடி ரயில் நிலையத்தில் பரிதாபமாக நின்றுள்ளனர். இவர்களை பார்த்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியதில், இரண்டு நாட்களுக்கு முன்புதான் கரூரில் இருந்து இந்த 3 சிறுமிகள் தங்கள் வீட்டில் இருந்து கிளம்பியுள்ளனர். முதலில் விசாகப்பட்டினத்தை அடைந்து பின்னர் கடல் மார்க்கமாக கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும், இதில் பெரிய ஹைலைட்டே கொரியாவிற்கு பயணம் மேற்கொள்வதற்காக வெறும் 14,000 ரூபாயுடன் சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
டிசம்பர் மாதமே போடப்பட்ட திட்டம்:
மைனர் சிறுமிகள் முதலில் கடந்த டிசம்பர் மாதமே கொரியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அப்போது, சில காரணங்களால் திட்டமானது கைவிடப்பட்டது. இதையடுத்து, மீண்டும் திட்டமிட்ட சிறுமிகள், 3 நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ரயிலில் ஏறி சென்னை வந்துள்ளனர். அதன் பின்னர், எப்படியாவது சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்றடைய திட்டமிட்டுள்ளனர்.
முதலில் பெரும் கனவோடு கொரிய பயணத்தை உற்சாகமாக தொடங்கிய சிறுமிகள், பின்னர் பயத்தையும், சலிப்பையும் கொடுக்க தொடங்கியுள்ளது. பயணத்தினால் ஏற்பட்ட சிரமங்கள் மனதில் பயத்தை கொடுக்க, மீண்டும் வீடு திரும்ப முடிவெடுத்தனர். இதையடுத்து, மீண்டும் ரயிலில் சென்னையில் இருந்து வேலூர் காட்பாடிக்கு வந்துள்ளனர். அப்போதுதான் காவல்துறையினரின் கண் பார்வையில் சிக்கியுள்ளனர்.
சொதப்பிய திட்டங்கள்:
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், “கடந்த ஜனவரி 4ம் தேதி 3 சிறுமிகளும் வீட்டுக்கு தெரியாமல் கிளம்பியுள்ளனர். சென்னைக்கு வந்த பிறகு, விசாகப்பட்டினம் செல்லும் இரண்டு முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள லாட்ஜில் ரூ. 1200 க்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போதுதான் இந்த சிறுமிகள் தாங்கள் எவ்வளவு பெரிய தவறை செய்துள்ளோம் என உணர்ந்து, மீண்டும் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து ரயிலில் சென்ற சிறுமிகள் மூவரும் உணவு வாங்குவதற்காக காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கினர். உணவுக்காக இறங்கிய சிறுமிகள் மூவரும் ரயில் புறப்பட்டதை கூட அறியாமல் ஸ்டேஷனில் சுற்றி வந்துள்ளனர். அப்போது நீண்ட நேரமாக ஸ்டேஷனை சுற்றி வந்த சிறுமிகளின் செயல்களை கண்ட ஆர்பிஎஃப் காவல்துறையினர் தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.