சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த மிக மோசமான அரசு இதுதான்.! ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்த எம்பி தயாநிதிமாறன்.!
”தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு செய்த துரோகத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒதுபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆந்திராவை தவிர தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளன”
பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்பி தயாநிதிமாறன் ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். குறிப்பாக அதில் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கும் முக ஸ்டாலின் தனக்காக வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பாடுபட்டு வருகிறார். ஆனால் பிரதமர் மோடியோ வாக்களித்த மக்களுக்காகக் கூட பாடுபடவில்லை. கூட்டணிக் கட்சிகள் நலனை மட்டும் கருத்தில் கொள்கிறார். சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு இதுவரை ஒதுக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு சொந்த நிதியில் இருந்து மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்திற்கு ரூ 12 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. கோவையில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை என்றார்.
விலைவாசி உயர்வால் மக்கள் துன்பம்:
மேலும் தாம்பரம் - செங்கல்பட்டு உயர்மட்டச் சாலைக்கு ஒப்புதல் தரப்படவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உணவுப் பொருட்கள், எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர். ரஷ்யாவில் இருந்து பாதிவிலைக்கு கச்சா எண்ணெய் வாங்கிய போதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததன் மூலம் இந்தியர் ஒருவராவது பயனடைந்தாரா? தூத்துக்குடி வெள்ளத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரல் பார்வையிட்டபோதும் வெள்ளத்தடுப்பு நிதி ஒதுக்கப்படவில்லை. குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வாரி வழங்கிவிட்டு தமிழ்நாட்டை புறக்கணிப்பதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணமாக ரூ 37 ஆயிரம் கோடி கேட்டபோடு வெறும் ரூ 276 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியது. ஆனால் பீகாருக்கு வெள்ளத்தடுப்பு நிதியாக ரூ 11,500 கோடியை ஒன்றிய அரசு கொடுத்துள்ளது எனவும் ஆவேசமாக சாடினார்.
தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த ஒன்றிய அரசு:
தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு செய்த துரோகத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒதுபோதும் மன்னிக்க மாட்டார்கள். பீகாருக்கு அதிக நிதி கொடுத்ததற்கு காரணம், மைனாரிட்டி பாஜக அரசை கூட்டணி மூலம் காப்பாற்றுவதற்காக மட்டுமே. திறன் மேம்பாடு, நான் முதல்வன் திட்டம், தோழிவிடுதி ஆகிய தமிழ்நாட்டு அரசின் திட்டங்கள் நாட்டுக்கே வழிகாட்டுகின்றன. ஆந்திராவை தவிர தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, பீகாருக்கு நிதி கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் பிற மாநிலங்களை தண்டிக்கக் கூடாது. புதிதாக கிழக்கு இந்தியா என்ற ஒன்றை நிதி அமைச்சர நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் குறிப்பிட்டார். ஆந்திரா, பீகார் உள்ள கிழக்கு இந்தியாவில் மேற்கு வங்கத்திற்கோ, தமிழ்நாட்டுக்கோ இடமில்லை என்றார்.
சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த மோசமான அரசு:
தொடர்ந்து, மோடியை சந்திக்க நேரம் கேட்டு 4 மாதம் காத்துக் கிடந்தவர் சந்திரபாபு நாயுடு, ஆனால் இன்று அவர் கேட்பதை எல்லாம் கொடுக்கிறீர்கள். போலோவரம் திட்டத்தை ஊழல் திட்டம் என 2019 இல் பிரதமர் மோடி வர்ணித்தார். ஆனால் தற்போது அந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார். பீகாரில் 15 பாலங்கள் உடைந்துள்ளன. ஆனால் எதும் கோரவில்லை, இதே பிற மாநிலங்களில் நடந்தால் சிபிஐ விசாரணை கேட்டிருப்பார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை. தொடர்ந்து 5 வது முறையாக மக்கள் தொகை பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த மிக மோசமான அரசு இதுதான். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக வளரும். ஆனால் மோடி ஆட்சியில் அது நடக்கவில்லை என்றும் சரமாரியாக விமர்சித்தார்.