விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை வழங்கவேண்டும் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரண தொகை அரசு வழங்க வேண்டும் என அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்
திருவண்ணாமலை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த நெல்களை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று மூட்டைகளை அடுக்கி வைக்கின்றனர் அங்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு எடை போடாமல் நாள் கணக்கில் காக்க வைக்கப்படுகின்றனர். இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் தற்போது உள்ள சூழ்நிலையில் மழை, வெயிலில், காற்று போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெல் மூட்டைகள் நாசமடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகின்றன. இதற்கு உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தற்போது முழு ஊரடங்கு காரணமாக விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் பூ போன்றவைகளை விற்பனை செய்ய முடியாமல் தோட்டத்திலே அழுகி நஷ்டம் ஏற்படுகின்றன. எனவே தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகளின் உழைப்பிற்கு ஏற்றவாறு சாகுபடி செய்துள்ள பரப்பளவுக்கு ஏற்றவாறும் அரசு நிவாரண உதவி வழங்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியும் உடனடியாக வழங்க வேண்டும்.அதிமுக ஆட்சியின் போது விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் விவசாயிகளின் நலன் கருதி புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் பாதிப்பிற்கு ஏற்றவாறு புயல் மற்றும் வறட்சி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
அதேபோல் தற்போது இந்த காலகட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி மேற்குறிப்பிட்ட அனைத்திற்கும் அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்” என
அதிமுக மாநில விவசாயப் பிரிவுச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டிருந்தார்.