ADGP Davidson: டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது நடவடிக்கை? தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது விசாரணை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
![ADGP Davidson: டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது நடவடிக்கை? தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.. The Union Home Ministry has ordered an investigation by the Enforcement Directorate against ADGP Davidson Dewasirwad in the fake passport case. ADGP Davidson: டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது நடவடிக்கை? தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/e57127d5b24997a7b0cbc79434a7c5601687926932595589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது விசாரணை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைத்ததும் காவல்துறையின் முக்கிய பொறுப்புகளில் திறமையானவர்களை தேடி தேடி நியமித்தார் ஸ்டாலின். அப்படி உளவுத்துறைக்கு நியமிக்கப்பட்டவர் தான் இந்த டேவிட்சன் தேவாசிர்வாதம். ஆனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் கடந்த ஆண்டில் எழுந்தவண்ணம் இருந்தது.
குறிப்பாக போலி பாஸ்போர்ட் வழக்கு. மதுரையில் 2019ஆம் ஆண்டில் சுமார் 200 பேர் போலி பாஸ்போர்ட் பெற்றிருக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை இடைநீக்கம் செய்து, விசாரிக்க வேண்டுமென தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு இந்த வாரம் வெள்ளிக்கிழமையுடன் பணி முடிந்து ஓய்வு பெறும் நிலையில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இதனால், காலியாகும் சென்னை கமிஷனர் பதவிக்கு டேவிட்சன் தேவாசிர்வாதம் குறிவைத்து காய்நகர்த்தியதாக கூறப்பட்டது. ஆனால், நேற்று வெளியான காவல் அதிகாரிகள் மாற்ற உத்தரவில், உளவுத்துறை ஏ.டி.ஜி.பியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, காவல் தலைமையக ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது விசாரணை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியர் வராகி என்பவர் கடந்த மே மாதம் 24ம் தேதி டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது சிபிஐ, என்ஐஏ மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு கடிதம் மூலம் புகார் அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வராகி, டேவிட்சன் தேவாசீர்வாதம் பணிபுரிந்த இடங்களில் பாஸ்போர்ட் மட்டுமல்லாமல் பல்வேறு விவகாரங்களில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார். நாளை மறுநாள் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்றும், போலி பாஸ்போர்ட் மட்டுமல்லாமல் மற்றவிவகாரங்களிலும் டேவிட்சன் சிக்குவார். அவர் சிறைக்குச் செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்று வராகி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் விசாரணை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறை மூத்த அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதும் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)