70 அடிக்கும் கீழே போன நீர்மட்டம்.. வெளியே தெரியும் ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை - மேட்டூர் அணையில் குவியும் மக்கள்..!
இதற்கு முன்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 20.7.2020 ஆம் தேதி நீர்மட்டம் 68.67 அடியாக குறைந்த போது, நந்தி சிலை வெளியே தெரிந்தது.
![70 அடிக்கும் கீழே போன நீர்மட்டம்.. வெளியே தெரியும் ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை - மேட்டூர் அணையில் குவியும் மக்கள்..! The Nandhi Statue in the Jalakandeswarar temple in Mettur Dam has been exposed. 70 அடிக்கும் கீழே போன நீர்மட்டம்.. வெளியே தெரியும் ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை - மேட்டூர் அணையில் குவியும் மக்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/07/5034666db8e148bb9b4d16e83cd8d5d01691394954554113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் ஆன நிலையில், அணை கட்டப்பட்ட போது 60 சதுர மைல் பரப்பளவு, நீர்த்தேக்கப் பகுதியாக அளவீடு செய்யப்பட்டது. அப்பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசித்து வந்த மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அவர்கள் கிராமங்களை விட்டு வெளியேறும் போது, வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டுச் சென்றனர். இவ்வாறு நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயில் மற்றும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயத்தை மக்கள் இடிக்காமல் விட்டுச் சென்றனர். சுண்ணாம்பு கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த வழிபாட்டு தலங்கள், ஆண்டுக்கணக்கில் தண்ணீரில் மூழ்கி கிடந்தாலும் சிதிலமடையாமல் காணப்படுகிறது.
புகழ்பெற்ற நந்தி சிலை:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரியும் சமயங்களில், வெளியே தெரியும் இந்த வழிபாட்டு தலங்களை சிலர் பரிசலில் அருகில் சென்று பார்த்து வருவது வழக்கம். அப்போது, சமூக விரோதிகள் சிலர் நாச வேலையில் ஈடுபட்டதால், கிறிஸ்தவ இரட்டை கோபுரத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. நந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஜூன் 12 ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஆனால், அணைக்கான நீர் வரத்து திருப்திகரமாக இல்லாததால், நீர் மட்டம் படிப்படியாக சரிந்தது. நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 2,406 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 3,077 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 22.83 டிஎம்சியாக உள்ளது.
மக்கள் கூட்டம்:
அணையின் நீர்மட்டம் சரிந்ததால், பண்ணவாடி நீர்த்தேக்கத்தில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் ஆலயத்தின் நுழைவாயில் பகுதியான நந்தி சிலை முழுவதும், வெளியே தெரியத்தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், ஆலயம் முழுமையாக தெரியும். நந்தி சிலை காட்டினால், அதனை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வது வழக்கம்.
இதற்கு முன்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 20.7.2020 ஆம் தேதி நீர்மட்டம் 68.67 அடியாக குறைந்த போது, நந்தி சிலை வெளியே தெரிந்தது. அப்போது, கொரோனா காலகட்டம் என்பதால், பண்ணவாடி சுற்றுலா தலம் மூடப்பட்டிருந்தது. இதனால், நந்தி சிலையை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. 2 ஆண்டுக்கு பின்பு, தற்போது மீண்டும் வெளியில் தலை காட்டி வருவதால், நந்தி சிலையை பார்க்க ஏராளமானோர் பண்ணவாடியில் குவிவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)