TN Rain Alert: விடுமுறை நாள் வெளிய போறீங்களா? சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன் தினம் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதேபோல் 29ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கணித்துள்ளது போல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அதேபோல் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் பெரும்பாலான மக்கள் குடும்பத்தினருடன் வெளியே செல்வார்கள். வெளியே செல்லும் மக்கள் குடையுடன் செல்லும்படி தனியார் வானியல் ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், மிதமான மழை இருந்தாலும் மக்கள் அச்சப்படும் அளவிற்கு பாதிப்புகள் இருக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் டிசம்பர் மாதம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் நல்ல மழை பதிவானது. வடகிழக்கு பருவ மழை ஜனவரி முதல் வாரம் வரை இருக்கும் எனவும் தனியார் வானியல் ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்றும் நாளையும், குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27.12.2023 மற்றும் 28.12.2023: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28.12.2023: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.