50 பைசாவிற்கு ஐஸ்கிரீம்! கட்டுக்கடங்காமல் வந்த கூட்டம்! கடையை மூடிய போலீஸ் - கரூரில் பரபரப்பு
கரூர் தேர் வீதி மாரியம்மன் கோவில் அருகில் ஃபலுூடா சாப் என்ற ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது.பழைய 50 பைசா நாணயத்தை கொண்டு வரும் நபர்களுக்கு சுமார் 100 ரூபாய் மதிப்புள்ள ஐஸ்கிரீம் கொடுக்கப்படும்
கரூரில் பழைய 50 பைசாவிற்கு பலூடா ஐஸ்கிரீம் ஆஃபர் என்ற தகவலறிந்து முண்டியடித்த கூட்டம் - அனுமதியின்றி சலுகை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய கடையை போலீசார் இழுத்து மூடினர்.
50 பைசாவுக்கு ஐஸ்கிரீம்:
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி மாரியம்மன் கோவில் அருகில் ஃபலுூடா சாப் என்ற ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. மூன்றாவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடையின் உரிமையாளர் பழைய 50 பைசா நாணயத்தை கொண்டு வரும் நபர்களுக்கு, சுமார் 100 ரூபாய் மதிப்புள்ள ஐஸ்கிரீம் கொடுக்கப்படும் என்று சலுகை ஒன்றை அறிவித்திருந்தார். முதலில் வரும் 200 நபர்களுக்கு 50 பைசா என்ற சலுகை விலையில் ஐஸ்கிரீம் கிடைக்கும் என்று அறிவித்து, கடையின் முன்பு விளம்பர பேனரும் வைக்கப்பட்டது.
கட்டுக்கடங்காத கூட்டம்:
இந்த தகவலை கேள்விப்பட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக தாங்கள் சேமித்து வைத்திருந்த 50 பைசா பழைய நாணயங்களுடன் கடையின் முன்பு குவிந்தனர். நேரம் அதிகமாக, அதிகமாக கடையின் முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு டோக்கன் வாங்குவதற்காக கடை உரிமையாளரை சூழ்ந்து கொண்டு சாலையில் கூச்சலிட ஆரம்பித்தனர்.
கடையை மூடிய போலீஸ்:
இதுகுறித்து தகவலறிந்த கரூர் மாநகர காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் அனுமதியின்றி 50 பைசாவிற்கு ஐஸ்கிரீம் வழங்கப்படும் என்று சலுகை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியதற்காக கடையின் உரிமையாளரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், கைக்குழந்தைகளுடன் ஐஸ்கிரீம் சாப்பிட வந்திருந்த கூட்டத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், கடையை இழுத்து மூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.