High Court: அரசு பணி தேர்வு குளறுபடிகளைத் தவிர்க்க, விசாரணை குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
அரசுப் பணிக்கு தேர்வு நடத்தும் போது ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக விசாரணைக்குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.
அரசுப் பணிக்கு தேர்வு நடத்தும் போது ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2011 ம் ஆண்டு நடத்திய குரூப் 2 தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து, திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து, அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து, தவறான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தேர்வாணைய இணைச் செயலாளர் பிரான்சிஸ் மரிய புவி, துணைச் செயலாளர் ஏ.வி.ஞானமூர்த்தி, சார்புச் செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மனுதாரரை தேர்வு செய்வது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரை பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், நான்கு அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை சட்டப்படி விசாரித்து முடித்து நான்கு மாதங்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தேர்வு நடைமுறைகளில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டறிய ஒரு மாதத்தில் விசாரணைக் குழுவை அமைக்க தேர்வாணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணைக்குழு தனது விசாரணையை முடித்து, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நடைமுறைகளை விசாரணைக் குழு பரிந்துரைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். விசாரணைக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், தேர்வாணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்வாணையத்தின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.