‛நான் செயின் ஸ்மோக்கர்...’ விமானத்தில் ரவுண்ட் புகை விட்ட தஞ்சை பயணியை ரவுண்ட் கட்டிய சக பயணிகள்!
‛ஸாரி... நான் செயின் ஸ்மோக்கர்... என்னால தம் அடிக்காம இருக்க முடியாது...’ என பந்தாவாக கூறிக்கொண்டு அவர்கள் முன்பே மீண்டும் வட்ட புகைகளை பறக்கவிட்டுள்ளார்.
விதிகளை மீறுவதும், உடைப்பதும் இங்கு சகஜம் தான். அவ்வாறு மீறுவோர், தங்கள் செயலுக்கு ஒரு வலுவான காரணத்தை கூறுவர். அதை நியாயப்படுத்தவும் செய்வர். அப்படி ஒரு சம்பவம் தான் விமானத்தில் நடந்திருக்கிறது. விமானம் என்பதால் ஏதோ வெளிநாட்டில் சம்பவம் என நினைத்துவிட வேண்டாம். தஞ்சாவூர்காரர் செய்த சம்பவம் தான் இது. அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா.. . இதோ... நீங்கள் படித்துப்பாருங்கள்...
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் வந்துள்ளது. 149 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரபீக் என்ற 53 வயதுடையவரும் பயணித்துள்ளார். இவர் துபாயில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். விடுமுறைக்காக தாய்நாடு திரும்பிய முகமது ரபீக், அதற்காக விமான பயணம் மேற்கொண்டுள்ளார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தின் உள்ளே புகை வந்துள்ளது.
இதனை கண்டு பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். எங்கிருந்து புகை வருகிறது என்பதை அறிந்து அருகே சென்று பார்த்த போது, பயணி முகமது ரபீக், சிகரெட் புகைத்து வட்டவட்டமாக புகையை வெளியேற்றிக் கொண்டிருந்தார். பார்த்த அனைவருக்கும் கோபம் உச்சத்தில் வந்தது. ‛ஏங்க... விமானம் முழுக்க புகை மூட்டமா இருக்கு... இப்படி சிகரெட் குடித்தால் எப்படி மற்றவர்கள் பயணிக்க முடியும்...’ என்று கேட்டுள்ளனர். ‛ஸாரி... நான் செயின் ஸ்மோக்கர்... என்னால தம் அடிக்காம இருக்க முடியாது...’ என பந்தாவாக கூறிக்கொண்டு அவர்கள் முன்பே மீண்டும் வட்ட புகைகளை பறக்கவிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிதாக, விமானப்பணிப் பெண்கள் அவரை கடிந்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த முகமது ரபீக், தனது இருக்கையிலிருந்து எழுந்து விமான கழிப்பறைக்குச் சென்று அடிக்கடி தம் அடித்துள்ளார். இதனால் காண்டான விமானப்பணிப்பெண்கள், விமான கேப்டனிடம் புகார் செய்துள்ளனர். அவரும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இச்சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு வழியாக புகையும், பகையுமாக விமானம் சென்னை வந்தடைந்தது. தகவலின் அடிப்படையில் ரன்வேயில் காத்திருந்த விமான பாதுகாப்பு அதிகாரிகள், விமானம் நின்றதுமே அதில் ஏறி முகமது ரபீக்கை கீழே இறக்கினர். பின்னர் அவரை குடியுரிமை மற்றும் சுங்கத் சோதனை நடத்திய பின் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாதுகாப்புச் சட்டத்தை மீறியது, பாதுகாக்கப்பட்ட இடத்தில் புகை பிடித்தது, சக பயணிகளுக்கு இடையூறு அளித்தது போன்ற பிரிவுகளின் கீழ் முகமது ரபீக் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுமுறைக்கு வந்த இடத்தில் புகையை ஏற்படுத்தி புகைச்சலுக்கு ஆளான முகமது ரபீக்... இனி வீடு திரும்ப சில வாரங்களோ, மாதங்களோ ஆகலாம். சிறை செல்வது உறுதி என்றே முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்