தடுமாறும் உலகப் பொருளாதாரம் - கரூரில் மந்தமான சூழலில் ஜவுளி தொழில்
உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தமான பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக கரூரில் உள்ள வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் ஜவுளி நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் வருவது மிகவும் குறைவாக உள்ளது.
தடுமாறும் உலக பொருளாதாரத்தில் மந்த சூழ்நிலையால் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்கம் அரசின் முயற்சியால் விரைவில் சரியாகிவிடும் என்று சங்கத் தலைவர் மெட்ரோ கோபாலகிருஷ்ணன் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தமான பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக கரூரில் உள்ள வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் ஜவுளி நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் வருவது மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்கள், விற்பனைகள் மந்தமான சூழலில் இருப்பதால் அதிக அளவு சரக்குகள் கையிருப்பு இருப்பதாக கூறி முன்பே கொடுத்திருக்கும் சில ஆடர்களை ரத்து செய்கிறார்கள்.
சில ஆடர்களை இரண்டு மாதம் முதல் நான்கு மாதங்கள் வரை ஏற்றுமதி செய்யாமல், உற்பத்தியாளர்கள் சரக்கு கிடக்குகளில் வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுகிறார்கள். இப்படி ஜவுளி தொழில் மந்தமாக இருக்கும் காரணத்தினாலும், ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும் பஞ்சு விலையின் காரணமாகவும், நூல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தங்களது தொழிற்சாலைகளில் நூல் உற்பத்தியை குறைக்க போவதாக தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு நூல் உற்பத்தியை குறைக்கும் பொழுது, புதிய ஆர்டர்கள் வரும் நேரத்தில் நூல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் வீட்டு உபயோக ஜவுளி தொழில் புரியும் நிறுவனங்கள் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து புதிய ஆர்டர்களை பெறும் பொழுது இங்கு இருக்கக்கூடிய சூழல்களை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
தொழில் நிறுவனங்களுக்குள் போட்டியிட்டு, மிக குறைந்த விலையில் ஆர்டர்களை பெறாமல் இருப்பதும் நல்லது.
ஆர்டர் கொடுக்கும் வெளிநாட்டு நிறுவனத்தின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும், எந்த அளவிற்கு அவர்களுக்கு சரக்குகளை அனுப்பலாம் என்பதையும் இந்திய ஏற்றுமதி கடன் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் தெரிந்து கொண்டு, ஆர்டர்களுக்கு காப்பீட்டு செய்து கொள்வது மிகவும் பாதுகாப்பான செயலாக இருக்கும். கரூர் ஜவுளி தொழில் அழிந்து வருவதாகவும், ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதாகவும் கடந்த சில நாட்களாக வரும் செய்திகள் ஜவுளி தொழிலில் இருப்பவர்களை கவலை தரும் செயலாக இருக்கின்றது. இந்தச் சூழல் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாம். உலக நாடுகள் மந்தமான பொருளாதார சூழலில் இருந்து இன்னும் சில மாதங்களில் மீண்டும் வரும் பொழுது வரும் பொழுது ஜவுளி தொழிலில் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஜவுளி தொழிலில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கவனித்து வருவதுடன், ஜவுளி தொழிலை வளர்ப்பதற்கு தேவையான கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து சமர்ப்பித்து வருகிறது. ஜவுளி தொழில் வளர்ப்பதற்கு, அதன் மூல கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கு, மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை அறிவித்து, ஜவுளி தொழிலுக்கு மிகவும் சாதகமான ஒரு சூழலை உருவாக்கி வருகிறார்கள். எனவே உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வரும் கால வரை ஜவுளி தொழிலில் இருப்பவர்கள் கவனத்துடனும் பொறுமையுடனும் வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். இவ்வாறு கரூர் ஜவுளி உற்பத்தியாளர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.