TN Rain : 14 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது... எங்கெங்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கலவையில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக விருதுநகர், ஆண்டிபட்டி, மதுரை தெற்கு, அரவக்குறிச்சி, செந்துரை, ஏற்காடு, பெலந்தூரை ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. லட்சத்தீவு பகுதி, கர்நாடகா, கேரளா தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்