TN Infrastructure: தமிழ்நாடு - 50 திட்டங்கள் , ரூ.45 ஆயிரம் கோடி - ஒரே ஊரில் ரூ.20,000 கோடி எங்கு? எதற்கு தெரியுமா?
TN Infrastructure: தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக அடுத்தடுத்து 50 வளர்ச்சி திட்டங்களுக்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Infrastructure: தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக 50 வளர்ச்சி திட்டங்கள், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு - 50 வளர்ச்சி திட்டங்கள்:
தமிழ்நாடு அரசு ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில் தான், தமிழ்நாடு அரசு 45 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான, 50க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் தொடர்பான ஏலங்கள் அடுத்த 1-2 ஆண்டுகளில் வெளியிடப்பட உள்ளன. இதில் பரந்தூரில் அமைய உள்ள பசுமை விமான நிலையம், இரண்டு பம்ப் சேமிப்பு திட்டங்கள் மற்றும் சென்னைக்கு அருகில் ஒரு அனல் மின் திட்டம் ஆகியவை அடங்கும்.
அரசு - தனியார் கூட்டு திட்டங்கள்:
பெரிய அளவிலான திட்டங்கள் அனைத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கூட்டு முறையில் செயல்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, டிரான்ஸ்மிஷன் திட்டங்கள், 24X7 நீர் வழங்கல் திட்டங்கள், ஒரு உப்புநீக்கும் ஆலை, தொழில்துறை உள்கட்டமைப்பு மற்றும் கழிவுகளிலிருந்து ஆற்றல் உற்பத்தி திட்டம் ஆகியவை அடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரிய திட்டங்கள் நிறைவடைய 5-6 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் சிறிய திட்டங்கள் இரண்டு ஆண்டுகளில் முழுமை பெறலாம்.
பரந்தூர் விமான நிலையம்:
அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சி திட்டங்களில் மிகப்பெரியதாக, பரந்தூர் திட்டத்திற்கு மத்திய அரசு அதன் முதன்மை ஒப்புதலை வழங்கும் திட்டமாகும். சுமார் ரூ.20,000 கோடிக்கு இந்த திட்டத்திற்கான ஏலம் தயாராகி வருகிறது. 2025-26 பட்ஜெட்டில் தமிழக அரசு, 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளதால், அதன் மின் தேவை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லட்சிய இலக்கை அடைய, 2030 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான மூலோபாய செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பசுமை ஆற்றல்
பசுமை ஆற்றலை நோக்கிய இந்தப் பயணத்தின் முதல் படியாக, வெள்ளிமலைப் பகுதியில் 1,100 மெகாவாட் மற்றும் ஆழியார் பகுதியில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட பம்ப் செய்யப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் அரசு மஉற்றும் தனியார் கூட்டு (பிபிபி) முயற்சியில் உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான மொத்த முதலீட்டுத் தொகை ரூ.11,721 கோடி என கனக்கிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஏல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன, இது மாநிலத்திற்கு முக்கியமானதாக இருக்கும் என்று மினவாரியத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு திட்டம் என்பது ஒரு வகையான நீர்மின்சார சேமிப்பு ஆகும். இது வெவ்வேறு உயரங்களில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களைப் பயன்படுத்தி தண்ணீரை சேமித்து அவற்றுக்கிடையே நகர்த்துவதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் நீலகிரி மலைகளில் உள்ள குண்டாவில் 4 X 125 மெகாவாட் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இது இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை அனல்மின் திட்டம்:
வட சென்னையில் 1 X 660 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டத்திற்கும் ஏலம் கோரப்படும். இந்த திட்டத்திற்கு சுமார் ₹7,000 கோடி செலவாகும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.





















