TN Headlines:+2 மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு;சென்னையில் மழை தொடருமா?முக்கியச் செய்திகள் ரவுண்டப்!
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - யாருக்கு ஆதரவு? த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு யாருக்கும் ஆதரவளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக நெல்கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்!
உலகத்திற்கே அச்சாணியாக விளங்கும் உழவர்களை தி.மு.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடிக் கவனம் செலுத்தி வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, நெல் கொள்முதல் விலையை உடனடியாக குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், அச்சாணி இல்லாத தேர் எவ்வாறு ஒடாமல் முறிந்துவிடுமோ, அதுபோல தி.மு.க. ஆட்சியும் முடிந்துவிடும்.” இவ்வாறு அறிக்கையில் ஓ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளார்.
+2 மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது - பார்ப்பது எப்படி?
தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.gde.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன? முழு விபரம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றைவிட இன்று வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் ,பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மக்களே உஷார்! கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத 800 ஆம்னி பேருந்துகள்! பயணிகளை எச்சரிக்கும் தமிழக அரசு
அகில இந்திய சுற்றுலாச் அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் அனைத்து ஆம்னிப் பேருந்துகளும் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்."இன்னும் 800 ஆம்னிப் பேருந்துகள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை.பொதுமக்களுக்கு தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இருப்பினும்,இத்தகைய முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது." என்று அரசு தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 114 கன அடியாக அதிகரிப்பு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 114 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.