Delhi Visit: ஆளுநர் ரவி, இ.பி.எஸ். இன்று.. முதலமைச்சர் ஸ்டாலின் நாளை..! அடுத்தடுத்து டெல்லி பயணம்..! காரணம் என்ன?
தமிழக ஆளுநர் ரவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்றும், முதலமைச்சர் ஸ்டாலின் நாளையும் டெல்லி செல்ல உள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே நாளில் டெல்லி சென்றுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இவர்கள் தனித்தனியே ஆலோசனை நடத்த உள்ளனர். இதைத்தொடர்ந்து, நாளை முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார்.
தேர்தல் பணியில் எடப்பாடி:
பல்வேறு சட்ட நடவடிக்கைக்ளுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இரட்டை இலை சின்னத்தை தன்வசப்படுத்தியதோடு, அவசர செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். அதேநேரம், அண்மையில் திருச்சியில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற மாநாடு சற்றே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை உடன் மோதல்:
அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை பேசியது இரு கட்சியினரிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியது. முடிந்தால் என்னை தலைமைப் பதவியில் இருந்து மாற்றுங்கள் எனவும் சவால் விடுத்து இருந்தார். அதைத்தொடர்ந்து பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறினாலும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உடன் மோதல் போக்கையே தொடர்ந்து வருகிறார்.
செய்தியாளர் சந்திப்பின்போது கூட அவர் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து வருகிறார். அதோடு, கூட்டணியை நிர்ணயிக்க கூடியவர்கள் டெல்லியில் உள்ள பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் நட்டா மட்டுமே. மேலே பாஸ் இருக்கும்போது, கீழே இருப்பவர்களிடம் நான் ஏன் பேச வேண்டும்? கூட்டணி குறித்து மாநில தலைவர்களிடம் எல்லாம் பேச முடியாது என திட்டவட்டமாக பேசி வருகிறார்.
அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:
இத்தகைய சூழலில் இன்று டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்திக்க உள்ளார். அப்போது பாஜக உடனான கூட்டணி, அண்ணாமலை உடனான மோதல், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் சட்ட- ஒழுங்கு பிரச்னை குறித்து இருவரும் ஆலோசிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் டெல்லி பயணம்:
தமிழக அரசுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வரும் ஆளுநர் ரவி, அண்மையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். அதோடு, ஆளுநரை சந்தித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக அண்ணாமலை புகார் அளித்து இருந்தார். இந்த சூழலில் தான் இன்று காலையிலேயே சென்னையில் இருந்து விமானம் மூலமாக 3 நாள் பயணமாக ஆளுநர் டெல்லி புறப்பட்டார். இந்த பயணத்தின் போது குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆளும் திமுக தொடர்பாக எதிர்க்கட்சியினர் அளித்த பல்வேறு புகார்கள் குறித்து, உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் டெல்லி பயணம்:
இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்கிறார். அங்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் இரவு 8.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.