CM Stalin On ED Raid: ஏவல் அமைப்பான அமலாக்கத்துறை.. பயமுறுத்த பாக்றாங்க, பலிக்காது - பாஜகவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
அமலாக்கத்துறை சோதனை மூலம் பாஜக அரசு முன்னெடுக்கும் தந்திரமெல்லாம் பலிக்காது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை மூலம் பாஜக அரசு முன்னெடுக்கும் தந்திரமெல்லாம் பலிக்காது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏவல் அமைப்பான அமலாக்கத்துறை:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டார். அதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பீகாரிலும் அதை தொடர்ந்து கர்நாடகாவிலும் பாஜகவை விழ்த்துவதற்காக கூட்டப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாஜக அரசுக்கு எரிச்சலை தந்துள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான், மத்திய அரசால் அமலாக்கத்துறை இன்று ஏவப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பணியை வடநாட்டில் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் காட்ட தொடங்கியுள்ளனர். ஆனால், அதைபற்றி எல்லாம் கிஞ்சித்தும் திமுக கவலைபடவில்லை.
தந்திரமெல்லாம் பலிக்காது:
பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தபப்டுகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 13 ஆண்டுகளுக்கு முன்பாக புனையப்பட்ட பொய் வழக்கு தான் இது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தான், அமலாக்கத்துற இந்த வழக்கில் நடவடிக்கையை எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்கான தந்திரம் தான் இது. அவற்றை சமாளிக்க எதிர்கட்சிகளாக இருக்கும் நாங்கள் தயார். அமலாக்கத்துறை சோதனையை பொன்முடி சட்டப்படி எதிர்கொள்வார்.
திமுகவிற்காக பரப்புரை செய்யும் அமலாக்கத்துறை:
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆளுநர் திமுக கூட்டணிக்காக தேர்தல் பரப்புரையை நடத்தி வருகிறார். தற்போது அமலாக்கத்துறையும் சேர்ந்துள்ளது. இதனால் தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என கருதுகிறேன். அமலாக்கத்துறை சோதனை எல்லாம் சகஜம், சர்வ சாதாரணம் இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
காவிரி பிரச்னை குறித்து பேசப்படுமா?
காவிரி மேகதாது பிரச்னயை பொருத்தவரையில், கருணாநிதி முன்னெடுத்த பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம். இந்த கூட்டம் என்பது மத்தியில் இருக்கும் ஆட்சியை அகற்றுதவற்கான கூட்டம். மேகதாது தொடர்பான கூட்டம் அல்ல. தற்போது இந்தியாவிற்கே ஆபத்து வந்துள்ளது. அதிலிருந்து காப்பற்றுவதற்கான கூட்டம் தான் இது” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டம்:
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், அண்மையில் பீகாரில் ஒரு பிரமாண்ட கூட்டம் நடைபெற்றது. அதில் ராகுல் காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக, பெங்களூருவில் இன்றும் , நாளையும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 24 முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதில், கூட்டணிய அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.