Dayalu Ammal: சென்னை விரைந்த சிஎம் ஸ்டாலின்.. தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு?
Dayalu Ammal Health: முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயார் தயாளு அம்மாளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
சென்னை விரையும் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தாயாரின் உடல்நிலை தொடர்பாக, மருத்துவர்களிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அதோடு, நாகை பயணத்தை முடித்துக்கொண்டு, விரைந்து சென்னை திரும்பியவர் நேரடியாக மருத்துவமனைக்கும் சென்று நலம் விசாரித்துள்ளார். தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவமனை தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
யார் இந்த தயாளு அம்மாள்?
தயாளு அம்மாள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாவது மனைவி ஆவார். இவருக்கு தற்போது 92 வயது என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி, மு. க. முத்துவை ஈன்றெடுத்த சில ஆண்டுகளில் காலமானார். பின்னர் 1949ஆம் ஆண்டில் கருணாநிதி தயாளு அம்மாளை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி மு. க. அழகிரி, மு. க. செல்வி, மு. க. ஸ்டாலின் மற்றும் மு. க. தமிழரசு என நான்கு பிள்ளைகளை ஈன்றெடுத்தது. திமுகவின் ஆ. ராசா மத்திய அரசில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செயதாக புகார் எழுந்தது. அந்த வழக்குல் தயாளு அம்மாளையும் சேர்த்து மத்திய புலனாய்வுத் துறை குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

