தூத்துக்குடி துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் பணி வழங்கினாரா ஸ்டாலின்?
ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி “ இன்னும் 10 ஆண்டுகளில் இவர்கள் எல்லாம் தாசில்தார் ஆகலாம், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பணி ஆணையை ஏற்றுக் கொண்டனர்” என கூறினார்.
கடந்த 2018 அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை எனக் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை. அதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாகிச்சூட்டுக்கான காரணம் குறித்து விசாரிக்க அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரணை ஆணையம் அமைத்தார். 3 ஆண்டுகளாக அதன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டதோடு , வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை எனவும் அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோரை சந்தித்து அவர்களுக்கு அரசு வேலை வழங்கினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
எத்தனை முறை தான் வேலை கொடுப்பிங்க pic.twitter.com/jFZLnd4siM
— Kannu Deepan KD (@kannudeepan11) May 21, 2021
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யச் சென்ற முதல்வர் ஸ்டாலின் , துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு இன்று பணியானை வழங்கினார். ஏற்கெனவே பணியாணை வழங்கியிருக்கும் போது மீண்டும் அவர்களுக்கு பணியாணை வழங்கியது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே பணியாணை பெற்றவர்கள் மீண்டும் எப்படி
— AIADMK SOCIAL MEDIA WING @ TN (@Aiadmk_IT_Wing2) May 21, 2021
இது எந்த தூத்துக்குடி புதுசா உருவாக்கப்பட்டதா pic.twitter.com/MXxhObnxjz
அவர்கள் சொல்வது உண்மையா? ஸ்டாலின் மீண்டும் பணியாணை வழங்கினாரா? என ஆய்வு செய்தோம். துப்பாகிச் சூட்டால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 10 லட்சம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் காயம்பட்டோர் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிலையில் வழங்கப்பட்ட பணி நியமனம் தகுதிக்கேற்றதாக இல்லை என்றும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வேலை கொடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அர்ஜூனன் பேசும்போது ”கல்வித்தகுதி கணக்கில் கொள்ளப்படாமல், ஏதோ ஒரு வேலை தர வேண்டும் என கொடுத்துள்ளார்கள்” என சொன்னார். ஆனால் அப்போதைய ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி “ இன்னும் 10 ஆண்டுகளில் இவர்கள் எல்லாம் தாசில்தார் ஆகலாம், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பணி ஆணையை ஏற்றுக் கொண்டனர்” என கூறினார். ஆனால் அந்த குற்றச்சாட்டு அப்படியே இருந்தது.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்திடம் கடந்த ஆண்டு மே மாதம் ஆஜரான பணி நியமன ஆணை பெற்றவர்கள், “எங்களின் தகுதிக்கேற்ப இந்த வேலைகள் இல்லை, உரிய வேலை தர வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். அதே போல் “ கடந்த பிப்ரவரி மாதமும் மாவட்ட ஆட்சியரை சந்தித்த மக்கள் மனு அளித்ததோடு உரிய வேலையை தர முதல்வராக இருந்த பழனிசாமியை வலியுறுத்தினர்.
பணி நியமன ஆணை பெற்றவர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் முதல்வர் முக ஸ்டாலினுக்கு சமர்பித்த தனது இடைக்கால அறிக்கையில் “துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட வேலைகள், அவர்கள் கல்வித்தகுதிக்கு ஏற்றதாக இல்லை என்றும் காலியாக உள்ள தகுதிக்கேற்ற இடங்களில் அவர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய பணி இடங்களை கண்டறிந்து பணி நியமனம் செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் காலியிடங்களை கண்டறிந்து, பணி நியமன ஆணைகள் தயாராகின. அதனையடுத்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் அவர்கள் அனைவரையும் அழைத்து, கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு பணி நியமன ஆணையை வழங்கினார்.