CM MK Stalin : திடீரென மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! நடந்தது என்ன..?
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 1 மணி நேரம் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக இயங்கி வருகிறார். இதனால், அவ்வப்போது அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று இரவு திடீரென 8.15 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். திடீரென மருத்துவமனைக்கு முதலமைச்சர் சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதலில், முதலமைச்சருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் அதற்கான சிகிச்சைக்காக அவர் சென்றுள்ளதாக கூறப்பட்டது.
பின்னர், மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட முதுகு வலி காரணமாக அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
முதலில் மருத்துவமனையிலே சிகிச்சைக்காக மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், சுமார் 1 மணி நேரத்தில் பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார். மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுமார் 1 மணி நேரம் மருத்துவர்கள் முதுகு வலிக்கான, வழக்கமான பரிசோதனைகளை மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர்.