OPS - Annamalai: பழனிசாமியைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸைச் சந்தித்த அண்ணாமலை.. இடைதேர்தலில் யாருக்கு ஆதரவு?
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, ஓ. பன்னீர் செல்வத்தையும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.
ஓபிஎஸ் - அண்ணாமலை சந்திப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கும் என பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், ஈபிஎஸ்-ஐ தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ்-ஐயும், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். அப்போது, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் நிலைப்பாடு:
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், ஒருவேளை பாஜக போட்டியிட்டல் தங்களது வேட்பாளரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அதோடு, பாஜகவின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வரை, நாங்கள் காத்திருப்போம் என்றும் கூறினார்.
பாஜக நிலைப்பாடு என்ன?
இந்நிலையில் தான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைதொடர்ந்து தற்போது, சி.டி. ரவி ஆகியோருடன் சேர்ந்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ அடுத்தடுத்து சந்தித்துள்ளார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தனித்து போட்டியிடுகிறதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளில் யாருக்கேனும் ஆதரவு அளிக்கிறதா அல்லது எந்தவொரு அணிக்கும் ஆதரவு இல்லையா என, அண்ணாமலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.