"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
குடிமராமத்து நல்ல திட்டம் என்றும் அதை குறை சொல்ல மாட்டேன் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, நீர்மேலாண்மையில் புரட்சி செய்வதற்காக குடிமராமத்து திட்டத்தைச் செயல்படுத்தினார்.
குடிமராமத்து திட்டம்:
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய, உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய அனைத்து ஏரிகளும், குளங்களும் தூர்வாரப்பட்டு 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் அன்றைக்குத் தூர்வாரப்பட்டது. மீதமுள்ள 8 ஆயிரம் ஏரிகளை தூர்வாரும் திட்டத்தை குடிமராமத்து திட்டத்தின் கீழ் எடுத்தால், இதுபோன்ற மழைக்காலங்களில் மழைநீரை சேமிப்பதற்கு குடிமராமத்து திட்டம் புரட்சிகரமான திட்டம். எஞ்சியுள்ள 8 ஆயிரம் ஏரிகளை தூர்வார அமைச்சர் முன்வருவாரா? என்று கேட்டார்.
அவரது கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “ குடிமராமத்து என்பது ஒரு நல்ல திட்டம். அதை குறை சொல்ல மாட்டேன். உறுப்பினர் கூறியதையும் அரசு கவனிக்கும்.”இவ்வாறு அவர் பதிலளித்தார்.
1000 தடுப்பணைகள்:
மேலும், அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “ உறுப்பினர்கள் இப்போது கேட்பது தடுப்பணைகளே. அதுதான் சரியானதாக கூட இருக்கிறது. இதுவரை 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தாண்டு முதலமைச்சரிடம் நான் ஒரு 1000 தடுப்பணைகளை கட்ட அனுமதி கொடுத்தால் கூடுமான வரையில் உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதுதான் நீர்வளத்துறையில் இன்று செய்ய வேண்டிய திட்டமாக இருக்கிறது.
காரணம் தடுப்பணை கட்டுவதன் மூலம் அங்கே 6 அடி வரை தண்ணீர் நிற்கிறது. தண்ணீர் நிற்பதால் நீர் ஆதாரம் கிடைக்கிறது. மாயனூர் ஒரு காலத்தில் வறண்ட பூமியாக இருந்தது. தடுப்பணை கட்டிய பிறகு அது வளமான பூமியாக உள்ளது. எனது தொகுதியிலே ஒரு தடுப்பணை கட்டினேன். கட்டும்போது வேண்டாம் என்று பலரும் சொன்னார்கள். இப்போ மழையில் அனைத்து கிணற்றிலும் தண்ணீர் ஏறிவிட்டது. ஆகவே, விவசாயத்திற்கு தற்போது தேவை தடுப்பணைகள்தான். இதனால், உறுப்பினர் கூறியது போல தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தால் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். தூர்வாருவது என்பது அந்த கால்வாய்களை கவனத்தில் கொள்கிறேன். அப்போது, நடவடிக்கை எடுக்கப்படும். “
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்க விவகாரம், ஃபெஞ்சல் புயல் விவகாரம் குறித்த விவாதங்கள் காரசாரமாக நடைபெற்று வருகிறது. மழை காரணமாக பல உறுப்பினர்களும் தங்களது தொகுதியில் தடுப்பணை கட்டித் தருமாறு வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.