UPI: தமிழ்நாட்டின் அனைத்து மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகம் - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மொத்தம் 23 செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் வாடிக்கையாளர்களின் சேவையை கருத்தில் கொண்டு யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
UPI வசதி:
" தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ.(UPI) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரையில் காஞ்சிபுரம் நீங்கலாக மீதமிருந்த 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப் பட்டிருந்த நிலையில் இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்.
இதன்மூலம் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றுள்ளன. மேலும் இதன் மூலம், வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும். தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும்.
விரிவுப்படுத்த திட்டம்:
ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலை உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பணமற்ற பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு, மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் வங்கிக்கணக்குளை பராமரித்து வருகின்றனர். அதன்மூலம் அவர்கள் பல்வேறு பலன்களை அடைந்து வருகின்றனர். எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது மாநிலத்தில் உள்ள 23 மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ. வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிகளிலும் இனி வரும் காலங்களில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: IT Raid: வருமான வரித்துறையினருடன் மோதல் விவகாரம்; 50க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு
மேலும் படிக்க: சென்னை உயர் நீதிமன்றத்தின் முழுநேர தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா நியமனம்..!