IT Raid: வருமான வரித்துறையினருடன் மோதல் விவகாரம்; 50க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு
கரூரில் வருமான வரித்துறையினரை சோதனை செய்யவிடாமல் தடுத்த தி.மு.க.வைச் சேர்ந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்தாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை, கோயம்புத்தூர், கரூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சோதனையால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
வருமான வரித்துறை சோதனை:
கரூரில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒப்பந்தாரர் ஒருவர் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முயன்றனர். அப்போது, தி.மு.க.வினர் சிலர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட முடியாதவாறு அவர்களை தடுத்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும், சில இடங்களில் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல, சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளும் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
கரூர் : சோதனைக்கு வந்த அதிகாரியிடம் ஐ.டி கார்டை காட்ட சொல்லி வாக்குவாதம்!https://t.co/wupaoCzH82 | #SenthilBalaji #ITRaid #Politics #TamilNadu #Karur pic.twitter.com/NWiBtfV4Ei
— ABP Nadu (@abpnadu) May 26, 2023
இதன்பின்னர், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மீண்டும் பாதுகாப்பு கோரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வருமான வரித்துறையினர் பாதுகாப்பான முறையில் சோதனை செய்வதற்காக அந்த பகுதியில் மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட குமார் மற்றும் பால விநாயகா உரிமையாளர் தங்கராஜ் உள்ளிட்ட சிலர் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்கள் அளித்த புகாரின் பேரில் கையால் தாக்கியது, தகாத வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூன்று வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு:
அதேபோல அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் என்ற அடிப்படையில் தி.மு.க.வைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்கள் மீது கரூர் மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கரூரில் தற்போதைய நிலவரப்படி வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை 3 இடங்களில் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: PM Modi: கோடிக்கணக்கான மக்களின் அன்பும், நம்பிக்கையும் ஒவ்வொரு நொடியும் சேவை செய்ய தூண்டுகிறது - பிரதமர் மோடி
மேலும் படிக்க: Karnataka Cabinet Expansion: கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்... 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு... யார் யார் தெரியுமா...?