தவெகவை கூட்டணியில் இணைக்க துடிக்கும் பாஜக.. தயங்குகிறாரா விஜய்? தமிழிசை நறுக்
கூட்டணியை மேலும் பலப்படுத்துவதற்கான முயற்சிகள் டெல்லியில் நடந்து வருவதாக பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதாவது, அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவை கொண்டு வர பாஜகவின் தேசிய தலைமை முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை என்றும் யாரோ ஒருவர் சொல்வதை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக பார்க்க முடியாது என்றும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தவெகவை கூட்டணியில் இணைக்க துடிக்கும் பாஜக?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ள திமுகவை அதன் கோட்டையில் வீழ்த்த பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
இதற்காகவே, பலமான கூட்டணியை அமைக்கும் நோக்கில் அதிமுகவுடன் கைகோர்த்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை, திமுக எளிதாக வெற்றிபெற்று விடும் என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால், கூட்டணி கணக்கு மாறி, அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறது.
தயக்கம் காட்டுகிறாரா விஜய்?
இது, திமுக கூட்டணிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், கூட்டணியை மேலும் பலப்படுத்துவதற்கான முயற்சிகள் டெல்லியில் நடந்து வருவதாக பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதாவது, அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவை கொண்டு வர பாஜகவின் தேசிய தலைமை முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, ஆதவ் ஆர்ஜூனா மூலம் பாஜக தலைவர்கள் காய்களை நகர்த்தியதாகவும் ஆனால், அதற்கு விஜய் உறுதியாக நோ சொல்லிவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதற்கு ஏற்றார்போல், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதி என தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
தமிழிசை நறுக் பதில்:
கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி இல்லை என நிர்மல் குமார் கூறிய கருத்துக்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் எதிர்வினையாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பாஜக கூட்டணி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர் சொல்லட்டும் அதன் பின்பு பேசுகிறோம்.
தவெக சார்பாக எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வரவில்லை. கட்சியின் தலைவர் விஜயிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. யார் யாரோ சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கூட்டணி தொடர்பாக பேச எங்க கட்சியின் தலைவர்கள் இருப்பார்கள். எல்லோருமே ஒன்று சேர வேண்டிய சூழல் நமக்கு வந்திருக்கிறது என்பது எனது கருத்து.
கூட்டணி யாரிடம் பேசுவது, எப்படிப் பேசுவது என்பது குறித்து அகில பாரத தலைமை முடிவு செய்வார்கள். திராவிட முன்னேற்ற கழகம் அப்புறப்படுத்த வேண்டிய ஆட்சி. யாரெல்லாம் உங்க கொள்கை உள்ளவர்களோ அவர்களெல்லாம் உடன் இருந்தால் நல்லது என்பது எனது கருத்து" என்றார்.





















