Tamil Thai Vazhthu | தமிழ்த்தாய் வாழ்த்து பிறப்பு முதல் மாநில கீதம் ஆனது வரை...சந்தித்த சர்ச்சைகள்..
இந்த அறிவிப்பு வெளியானது, தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று நூற்றாண்டுகள் கடந்த இதே நாளில் இன்று (டிச.17) என்பது நினைவுகூறத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்து இனி தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகப் பாடப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் பெ.சுந்தரம் பிள்ளை. இவர் தன்னுடைய மனோன்மணியம் நூலால் மனோன்மணியம் சுந்தரனார் என்று அழைக்கப்படுகிறார். 1891-ல் எழுதப்பட்டு, கவிதை நாடக வடிவில் அமைந்த மனோன்மணியம், 4,500 வரிகள் கொண்டது. அதில் “தமிழ்த் தெய்வ வணக்கம்’’ எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியில், தமிழ்த்தாயைப் போற்றும் வகையில் அமைந்த ‘நீராருங் கடலுடுத்த’ என ஒரு பாடல் உள்ளது.
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே...
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!.
கடல் நீரை ஆடையாக உடுத்திய நிலத்தைப் போன்ற பெண்ணின் அழகு மிளிரும் முகமாகத் திகழ்வது பரதக் கண்டம் (பாரதம் - இந்தியா). அதில் தெக்கணம் (தென்னிந்தியா) பிறை போன்ற நெற்றியாகும். அதிலும் சிறப்புவாய்ந்த நறுமணம் கமழும் திலகமாகத் திராவிடத் திருநாடு விளங்குகிறது. அந்தத் திலகத்தின் நல்மணம்போல, அனைத்து உலகங்களும் மகிழ்வுடன் இருக்க, திசைகள் அனைத்திலும் புகழ்பெருக இருந்த பெண்ணை (தமிழை), அதன் குன்றா இளமையை, திறமையை செயல் மறந்து வாழ்த்துகிறோம் என்பதுதான் அதன் அர்த்தமாகும்.
இறந்த காலத்தில் தமிழா?
இதில், கடலுடுத்த நிலமும், திகழ்பரதமும் (முக்காலத்திற்கும் பொருந்தும்) வினைத் தொகையாக எழுதப்பட்ட நிலையில், புகழ்மணக்க இருந்த தமிழ் என்று இறந்த காலத்தில் தமிழைக் குறிப்பிட்டது கவனத்துக்கு உள்ளானது. எனினும் பெண்ணாக, தாயாக தமிழ் மொழி, உயர் திணையில் போற்றப்பட்டதால், அவ்வாறு கூறப்பட்டதாக அறிஞர்கள் குறிப்பிட்டனர்.
தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் இந்தப் பாடல் பாடப்பட வேண்டும் எனும் கோரிக்கை 1913ஆம் ஆண்டைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச்சங்கமாகக் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உருவான தமிழ்ச் சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டது. இதனைத் தமிழக அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணாவுக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கையாக விடுத்தனர்.
இதையடுத்து, அரசு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக மனோன்மணியம் பாடல் பாடப்படும் என்று 1970-ல் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அறிவித்தார். இந்தப் பாடல், தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு பாடப்பட்டு வருகிறது.
பரிசீலனையில் இருந்த திருக்குறள்
முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பற்றிய புலவர் குழு விவாதத்தின்போது, தாயுமானவர் பாடல் அல்லது திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தை முழுதுமாகப் பாடலாம் என்று பேசப்பட்டது. தாயுமானவர் பாடல் இந்து மதத்தைச் சார்ந்தது என்பதாலும் திருக்குறளில் தாள், அடி என்பது போன்ற சொற்கள் உருவ வழிபாட்டைக் குறிப்பதாலும் அவற்றுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து மனோன்மணியத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து இறுதி செய்யப்பட்டது. இதற்கும், கி.வா.ஜகன்னாதன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எனினும் சர்ச்சையைத் தவிர்க்க, பரம்பொருள் (இறைவன்) குறித்த புகழார வரிகளும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் தமிழின் உதிரத்திலே (வயிற்றில்) உதித்தன என்ற அர்த்தம் பொதிந்த வரிகளும் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கப்பட்டன.
அதாவது, பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையாளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்துசிதையாவுன்
என்ற வரிகள் மட்டும் நீக்கப்பட்டன.
தமிழுக்குப் பெருமை
கேரளாவில் பிறந்த சுந்தரனார் எழுதிய பாட்டுக்கு, அதே மாநிலத்தில் பிறந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, மதுரையில் பிறந்த டி.எம்.சௌந்தர்ராஜனும், ஆந்திராவைச் சேர்ந்த பி.சுசீலாவும் இணைந்து தமிழ்நாட்டுக்கான தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடி புதுப் பெருமை படைத்தனர்.
ஞான சரஸ்வதி சிலை
தமிழ்த்தாய்க்குச் சிலை அமைக்க அன்றைய தமிழ்நாடு அரசு திட்டமிட்டபோது, குறிப்பிட்ட மதம்சார் பெண் தெய்வ சிலைகளின் உருவங்கள் தவிர்க்கப்பட்டன. தமிழ்த்தாய் உருவத்துக்காகக் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள, சோழர் கால ஞான சரஸ்வதி வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மற்றொரு தமிழ்த்தாய் வாழ்த்து
எனினும் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட, தமிழ்த்தாய்க்கு மற்றொரு பாடல் புதுச்சேரியில் ஒலிக்கிறது.
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே! என்று எளிய தமிழில் தொடங்கும் அந்தப் பாடலை பாவேந்தர் பாரதிதாசன் எழுதியிருந்தார்.
அண்மையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஒருவர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று விதிகள் இல்லை என்று கூறியது சர்ச்சையை எழுப்பி இருந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மாநில கீதமாக ஒலிக்கும். அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானது, தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று நூற்றாண்டுகள் கடந்த இதே நாளில் இன்று (டிச.17) என்பது நினைவுகூறத்தக்கது.