(Source: ECI/ABP News/ABP Majha)
TN Urban Local Body Election: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரணிக்கு தடை.. கட்டுப்பாடுகள் விதிப்பு.. தேர்தல் விதிமுறைகள் முழு விவரம்..
TN Urban Local Body Election 2022: தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரணி, சைக்கிள் பேரணி போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் பேரணி, சைக்கிள் பேரணி போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. உள்அரங்கு கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி. உள்அரங்கு பரப்புரை கூட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்தல் பிரச்சாரத்தில் 3 பேர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கலாம். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின்படி தேர்தல் நடத்தப்படும். வெப்பமானி, முகக்கவசம் உள்ளிட்ட 13 உபகரணங்கள் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும். தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர். சென்னைக்கு மட்டும் 3 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்
மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி, துணையாள் ஆகிய முன்னேற்பாடுகள் செய்திட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன
முன்னதாக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று அறிவித்தார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 12838 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது . 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலை சந்திக்க உள்ளன. 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் அட்டவணை
வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் - ஜனவரி 28 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை)
வேட்புமனு தாக்கல் இறுதி நாள் - பிப்ரவரி 4
வேட்பு மனுக்கள் பரிசீலனை - பிப்ரவரி 5
வேட்பு மனு திரும்ப பெருவதற்கான கடைசி தேதி - பிப்ரவரி 7
வாக்கு பதிவு நடைபெறும் தேதி - பிப்ரவரி 19
வாக்கு பதிவு நேரம் - காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் - பிப்ரவரி 22
தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள் - பிப்ரவரி 24
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நாள் - மார்ச் 2
துணை மேயர், மேயர் பதவிகளுக்கு தேர்தல் - மார்ச் 4ஆம் தேதி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்