தமிழ்நாட்டில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் நூற்பாலைகள் மின்கட்டணம் மாற்றியமைப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சூரிய ஒளி சக்தி மேற்கூரை மூலம் மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மானியம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நூற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலைகளுக்கு மின் கட்டணங்களை மாற்றி அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சூரிய ஒளி சக்தி மேற்கூரை மூலம் மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், “கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 2022-23 முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான காலத்திற்கான பல ஆண்டு கட்டண (Multl Year Tariff) மின்கட்டண மனுவை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) முன்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), சமர்ப்பித்தது.
இதனால் ஏற்பட்ட மின்கட்டண மாற்றம் குறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தெரிவித்த கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களது நலனைப் பாதுகாக்கும் வகையில் கட்டணத்தை மாற்றி அமைத்திட தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, TANGEDCOவிற்கு ஆண்டிற்கு ரூ.2,000 கோடி வருவாய் குறைந்தாலும், தொழில்முனைவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளுக்கு 50 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.100 லிருந்து ரூ.75 எனவும் 50 கிலோவாட்டுக்கு மேல் 100 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை, ரூ.325லிருந்து ரூ.150 எனவும், 100 கிலோவாட் முதல் 112 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த மாதம் நிலையான கட்டணத்தை ஒன்றுக்கு ரூ.500லிருந்து ரூ.150 எனவும், 112 கிலோவாட்டுக்கு மேல் உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை, மாதம் ஒன்றுக்கு ரூ.600 லிருந்து ரூ.550 எனவும், TNERCயின் ஒப்புதல் பெற்று மாற்றியமைக்கப்பட்டது.
இதன் பின்னர், தொழில் மேம்பாட்டிற்கான மேலும் நடவடிக்கையாக, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவு நுகர்வோர்களின் கோரிக்கைகளை ஏற்று தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான (LT IIIB) உச்சநேர நுகர்விற்கான மின்கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 குறைத்து ஆணையிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த குறைக்கப்பட்ட கட்டணங்களுக்கான கூடுதல் மானியமாக ஆண்டிற்கு ரூ.145 கோடி தமிழக அரசு வழங்குகிறது. இதனால் சுமார் 3.37 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல ஆண்டு மின்கட்டண ஆணையின் படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்களும் தொழில்துறையினரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 ரூ லிருந்து 2.18 ரூ ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொழில்களின் நலம் காக்க தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு நிதி, மனிதவள மேம்பாடு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆகியோர்கள் முன்னிலையில் 21.07.2023 தலைமைச்செயலகத்தில் கூட்டம் அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜவுளித் தொழிலின் நிலைத் தன்மையை தமிழக முதல்வர் கனிவான பார்வைக்கு எடுத்துச் சென்றனர்.
தமிழ்நாட்டில் தொழில்துறையிலும் ஜவுளித்துறையிலும் தற்போது நிலவி வரும் இடர்பாடுகளை ஆராய்ந்து, ஒன்றிய அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கோரிக்கைகளை கடிதம் மூலம் தெரிவித்தும், மின்கட்டணம் தொடர்பான தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை பரிசீலித்தும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
1. பருவகாலத் தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின்பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்து கொள்ளும் வகையில், அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை மின்பளுவிற்குள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. இச்சலுகையை ஆண்டு ஒன்றுக்கு நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதரை மானியம் வழங்கப்படும்.
3. 12 கிலோ வாட் க்கு குறைவாக உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டி IIIB லிருந்து IIIA1 வீதப்பட்டிக்கு மாற்றுவது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துரு பெற்றபின் பரிசீலிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளனர்.