Sputnik V Vaccine : சென்னை வந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி!
கொரோனா நோயாளிகளுக்கு செலுத்துவதற்காக ஹைதராபாத்தில் இருந்து ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி தனி விமானம் மூலமாக இன்று சென்னை வந்தது.
கொரோனா வைரசின் இரண்டாம் அலை இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநிலம் பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து விதித்து வந்தன. இதன் காரணமாக, தற்போது இந்தியாவில் தினசரி கொரானா பாதிப்பு 1 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது.
கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கும், தடுப்பூசி கொள்முதலை அதிகப்படுத்தவும் பல தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்யாவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்புட்னிக்வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பின்னர், ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையை அடுத்த பெரிய பனிச்சேரியில் உள்ள ஆய்வகத்திற்கு தடுப்பூசிகள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அதிகளவு கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டமாக திகழும் கோவை மாவட்டத்திற்கு ஒரு பெட்டி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மட்டுமே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மாதம் முதல் விரைவில் ஸ்புட்னிக் தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் பலரும் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக தடுப்பூசி மையத்திற்கு செல்லும் நிலையில், பல இடங்களில் தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு இன்னும் சில நாட்களில் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்து சேரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்துவதற்காக 44 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : எலும்பு மட்டும் 200 கிலோவா! இன்னும் இத்தனையா? : ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் படிமங்கள்!