Tamil Nadu: கனமழை எச்சரிக்கை! 22 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை! புயல் உருவாகும் அபாயம்?
TN weather Report: (24-11-2025): தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather Forecast Today: அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இன்று காலை 10 மணி வரை கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
வானிலை மையத்தின் அறிக்கையின்படி, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதே இசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 25-ஆம் தேதி வாக்கில், குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி வரை 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இன்று காலை 10 மணி வரை அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இன்று காலை 10 மணி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இன்று காலை 10 மணி வரை மிதமானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பணிக்கு செல்பவர்கள் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.





















