புதிய அமைச்சர்களுக்கு கிரீன்வேஸ் சாலையில் அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு!
தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் புதிய அமைச்சர்களுக்கு கிரின்வேஸ் சாலையில் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கும் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சரவை உறுப்பினர்களும் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிப்போரின் வசதிக்காக சென்னை, கிரின்வேஸ் சாலையில் அரசு இல்லங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம்.
தி.மு.க. தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளதால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டனர். இப்போது, அந்த வீடுகள் புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் தற்போது வசித்து வரும் இல்லத்திலே வசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி தற்போது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் அவர் வசித்த செவ்வந்தி இல்லத்திலே வசிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வசித்த சூரியகாந்தி இல்லம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வசித்த செண்பகம் இல்லம் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வசித்த செந்தாமரை இல்லம், செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு வசித்த சாமந்தி இல்லம், சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வசித்த ரோஜா இல்லம், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வசித்த சிறுவாணி இல்லம், சட்ட அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வசித்த தாமிரபரணி இல்லம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வசித்த வைகை இல்லம், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணி வசித்த மனோரஞ்சிதம் இல்லம், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வசித்த முல்லை இல்லம், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசித்த தென்பெண்ணை இல்லம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வசித்த காவேரி இல்லம், உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வசித்த எழில் இல்லம், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் தனபால் வசித்த குறிஞ்சி இல்லம் தற்போதைய சபாநாயகர் அப்பாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வசித்த அன்பு இல்லம், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு திருவரங்கம் இல்லமும், ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வசித்த இல்லம், துணை சபாநாயகர் பிச்சாண்டிக்கும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வசித்த இல்லம், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி. எஸ்.எஸ்.சிவசங்கர். மனோதங்கராஜ். மதிவேந்தன் ஆகியோருக்கு பங்களாக்கள் ஒதுக்கப்படவில்லை.