பால் கொள்முதல் விலை கிடைக்கும் வரை போராட்டம்.. துணைத் தலைவர் பெரியண்ணன் பேட்டி!
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, மூன்றாவது நாளாக பால் நிறுத்தும் போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் ஊற்றாமல் தொடர்ந்து மூன்றாவது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஆவினிற்கு நான்கு அரை லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 810 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டது உறுப்பினர்களாக உள்ளனர். குறிப்பாக சேலம் மாவட்டம் பாகல்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் கடந்த மூன்று நாட்களாக பால் ஊற்றாமல் உற்பத்தியாளர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் துணைத் தலைவர் பெரியண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "போராட்டத்தின் காரணமாக ஆவினிற்கு வரும் பாலின் அளவு நிறைய குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆவின் பாலை நம்பி நிறைய மக்கள் உள்ளனர். போராட்டத்தை முடக்குவதற்காக அரசு அதிகாரிகளை ஏவி விட்டு உற்பத்தியாளர்களை சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நிலை தொடருமானால் ஆவின் அழிவை நோக்கி செல்லுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் விலை உயர்த்தி தருவதால் உற்பத்தியாளர்கள் கஷ்டத்தை மறந்து தனியாருக்கு சென்று விற்று கொண்டுள்ளனர் ஆவினை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். இதனை கருத்தில் கொண்டு பசும்பால் ஒரு லிட்டருக்கு 42 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 51 ரூபாயும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். எங்களின் போராட்டம் முதல்வரும் கவனத்திற்கு சென்றதாக கூட தெரியவில்லை, ஆனால் பால்வளத்துறை அமைச்சர் எங்களுக்கு ஆவினில் ஒரு சொட்டு பால் கூட குறையவில்லை என்று பொய்யான தகவலை கூறி ஒரு வருகிறார். இந்த விலை ஏற்றம் இல்லாததால் 40 லட்சமாக இருக்கவேண்டிய பால் கொள்முதல் அளவு 27 லட்சமாக குறைந்துவிட்டது.
இதனை பரிசீலனை செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக விலையை உயர்த்தி தர வேண்டும். தனியார்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு தயாராக உள்ளனர். உற்பத்தியாளர்களை வா என்று அழைத்துக் கொண்டுள்ளனர் இந்தப் போராட்டம் தொடர்ந்தால் ஆவினை விட தனியாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. பால் கூட்டுறவு சங்க ஊழியர்களையும் பணியாளர்களையும் ஆவின் அரசு அதிகாரிகள் மிரட்டி வருவதாக குற்றம் சாட்டினர். தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் ஒற்ற கருத்து உடைய சங்கங்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை அறிவிக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், பால் கொள்முதல் விலை கிடைக்கும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்தி செயல்படுத்தி வருவதாகவும், திமுக பிரதிநிதிகள் காவல்துறை துணையுடன் அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக சென்று பாலை வாங்கி வந்து கூட்டுறவு சங்கத்தில் ஊற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.