![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கன்னியாகுமாரி, திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட் Tamil Nadu Meteorological Department has said that Kanyakumari and Tirunelveli districts are likely to receive rain for the next few days TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/b804dc18443b5856d0559584d9b37b881714030555417589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 28 ஆம் தேதி வரை தென் தமிழக கன்னியாகுமாரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
25.04.2024 முதல் 29.04.2024 வரை:
அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38°–41° செல்சியஸ்.
ஈரப்பதம்:
25.04.2024 முதல் 29.04.2024 வரை:
காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.0° செல்சியஸ், வேலூரில் 41.6° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், சேலத்தில் 41.1° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0° செல்சியஸ், தர்மபுரியில் 40.7° செல்சியஸ், திருத்தணியில் 40.6° செல்சியஸ், நாமக்கல் மற்றும் திருச்சியில் 40.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.7° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
திற்பரப்பு (கன்னியாகுமரி) 6, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 4, சிற்றாறு-I (கன்னியாகுமரி) 2, பாலமோர் (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)