TN Rain Alert: இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வெயில் எப்படி இருக்கும்? இன்றைய நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை ஒரு சில பகுதிகளில் லேசான மழை பதிவானது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் இன்று சில பகுதிகளில் மழை பதிவானது வெப்பநிலை சற்று தணிந்துள்ளது. அதேபோல் காலை முதல் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
திருக்குவளை (நாகப்பட்டினம்) 5, தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 4, வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 2, கோடியக்கரை (மயிலாடுதுறை), மிமிசல் (புதுக்கோட்டை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.