"இந்த நிமிடம்வரை தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளது" - அமைச்சர் சுப்ரமணியன்..!
"இந்த நிமிடம் வரை தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளது" எனவே மாணவர்கள் "நீட் தேர்வுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும்" என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
![Tamil Nadu has NEET exam till this minute says ma subramanian](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/20/5cfb6b0078336443b7f0b47d50dbe3f8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பு ஊசி முகாமினை தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட தொழுநோயாளிகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் அமைச்சர் வழங்கினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 11,490 பேர் பயன்பெறும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இப்பகுதியில் வசிப்போருக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் இந்த நிமிடம் வரை மருத்து நுழைவுத்தேர்வுக்கான நீட் தேர்வு உள்ளது எனவும் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடரும் என்றும் கூறிய மா.சுப்பிரமணின். திமுக அரசு என்றும் நீட் தேர்வுக்கு எதிரானது” எனவும் விளக்கம் அளித்தார்
நீட் தேர்வினை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தேர்வுக்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கூறிய அவர், நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு பத்து நாட்களில் தங்கள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. பின்னர் அது குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றார்.
மத்திய அரசு ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு தருவதாக சொன்ன தடுப்பூசியில் மீதமுள்ள 18 லட்சம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மேலும் அடுத்த மாதத்திற்கான தடுப்பூசி எண்ணிக்கையை மத்திய அரசு 71 லட்சமாக உயர்த்தி தருவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறினார். மத்திய அரசு ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை கொடுத்தாலும் அதனை செலுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளதாகவும் செய்தியாளர்களின் கேள்விக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)