கொரோனா 3வது அலை : தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு
திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், தொற்றின் மூன்றாம் அலையிலிருந்து பாதுகாக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலையிலிருந்து பாதுகாக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மக்கள் அனைவரும் அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்குக் கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கு இணங்க, இன்று (29-6-2021) வரை 353 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே, இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிடவும், இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.
இதனையடுத்து, சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயையும், கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார்.
தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#COVID19 சிகிச்சைப் பணிகளுக்காக #Donate2TNCMPRF நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி!
— M.K.Stalin (@mkstalin) May 29, 2021
நன்கொடை-செலவினங்கள் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இச்செயல் தொடரும்!
விரைவில் தமிழகம் மீளும்!
இணையசேவை-கடன் அட்டை மூலம் வழங்க:https://t.co/nTVBr8KJ1k
UPI- VPA ID: tncmprf@iob pic.twitter.com/EZfynL7sWo
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து, நடிகர்கள், தொழிலதிபர்கள், ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பலரும் நன்கொடை அளித்தனர்.