(Source: ECI/ABP News/ABP Majha)
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது - உதயநிதி ஸ்டாலின்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது. இதுகுறித்து நாளை சட்டசபையில் முதல்வர் அறிவிப்பார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பழுப்பு நிலக்கரி எடுப்பதை தமிழக அரசு அனுமதிக்காது என்றும் இது குறித்து நாளை சட்டசபையில் முதல்வர் அறிவிப்பார் எனவும் திருவாரூரில் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார்.
திருவாரூரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவை சேர்ந்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நண்பரும் மறைந்த திமுக பிரமுகருமான தென்னனின் நூறாவது பிறந்தநாள் விழா மறைந்த மாவட்டக் கழக அவைத் தலைவர் சித்தமல்லி சோமசுந்தரத்தின் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திருவாரூர் வருகை தந்தார்.
முன்னதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வறுமை ஒழிப்பு சிறப்பு திட்ட செயலாக்கம் ஊரக கடன்கள் குறித்த ஆய்வு கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி வறுமை ஒழிப்பு ஊடக கடன்கள் மகளிர் சுய உதவிக் கடன்கள் பல்வேறு அம்சங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “ கடந்த மார்ச் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஒரு சில திட்டங்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது. இதுகுறித்து நாளை சட்டசபையில் முதல்வர் அறிவிப்பார் என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் திருவாரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.