நவம்பர் மாதத்தில்தான் ஆரம்பம்.. வானிலை ஆய்வு மையத்தின் அலர்ட்.. ஆய்வில் இறங்கிய துணை முதல்வர்!
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை பெருநகர மாநகராட்சி, நீர்வளத்துறை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வரும் மழைக்காலங்களையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கடந்த 14 ந் தேதி, 15 ந் தேதி, 16 ந் தேதி ஆகிய நாட்களில் பெய்த மழையின் போது மழை நீரை அகற்றும் பணியில் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றிட 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இரவு, பகலாக சிறப்பாக பணிகளை மேற்கொண்டார்கள்.
"நவம்பர் மாதத்தில் தீவிர மழை"
அவ்வளவு மழை நீரும் சில மணி நேரங்களிலேயே வடிந்து சென்றது. சில பகுதிகளில் மோட்டார் வைத்து நீர் அகற்றப்பட்டது. சில மணிநேரங்களிலேயே பொதுமக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். தற்போது பெய்துள்ள மழை வெறும் ஆரம்பம்தான்.
நவம்பர் மாதத்தில்தான் தீவிர மழைக்காலம் ஆரம்பமாகும் என்று நம்முடைய வானிலை ஆய்வு மையத்தினர் கணித்து உள்ளார்கள். அடுத்த 15 நாட்களில் கண்காணிப்பு அலுவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மண்டலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள சீரமைப்பு நடவடிக்கைகள் எவை, எவை என்றும், அவை தற்போது எந்த நிலையில் உள்ளன என்பது குறித்தும் தெரிவிக்கவும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களின் விவரங்கள். அந்த இடங்களில் மழைநீர் வடிய எடுத்துக் கொண்ட நேரம், மழைநீர் கால்வாய்கள் மூலம் நீர் வடிந்து சென்ற இடங்களின் விவரங்கள். மோட்டார் பம்ப் வைத்து நீர் அகற்றப்பட்ட இடங்களின் விவரங்கள் என்று விரிவாக ஆய்வு மேற்கொண்டேன்.
வடகிழக்கு பருவமழையையொட்டி துணை முதல்வர் ஆய்வு:
மழையின்போது மின்தடை செய்யப்பட்ட பகுதிகள், எவ்வளவு மணி நேரத்தில் மின் இணைப்பு அந்த இடங்களுக்கு வழங்கப்பட்டன. மின்இணைப்பு துண்டிக்காமல் இருக்க மேற்கொள்ளப்பட்ட, படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தேன்.
பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சமூக வலைதளங்களில் வெளிவந்த தகவல்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டேன்.
சென்னை பெருநகர மாநகராட்சி, நீர்வளத்துறை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகள் குறித்தும், பிற பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டேன்.
வருகின்ற அக்டோபர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் கூடுதல் கவனத்துடன் அனைத்துதுறை அலுவலர்களும், கண்காணிப்பு அலுவலர்களும் மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.
சென்ற மழையின்போது மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களுடைய நன்மதிப்பை நாம் பெற்றோம். எதிர்காலத்திலும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்து இந்த அரசிற்கு நற்பெயரை பெற்றுத் தர நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கின்றேன்" என்றார்.