TN Chengalpattu Government Hospital | 13 பேர் உயிரிழக்க காரணமான செங்கல்பட்டு மருத்துவமனையில் நடந்தது என்ன?
நேற்று இரவு செங்கல்பட்டு மருத்துவமனையில் நடந்தது என்ன? 13 உயிர்களை காவு வாங்கிய டெக்னிக்கல் பிரச்னை ஏற்பட காரணம் எது?
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10:30-மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டெக்னிக்கல் பிரச்சனையால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று இரவு செங்கல்பட்டு மருத்துவமனையில் நடந்தது என்ன? 13 உயிர்களை காவு வாங்கிய டெக்னிக்கல் பிரச்னை என்ன?
செங்கல்பட்டு மருத்துவமனையில் 23 கிலோ லிட்டருக்கான ஆக்சிஜன் கெபாசிட்டி உள்ளது. நேற்று காலை 1.4 கிலோ லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பு இருந்துள்ளது. அது நேற்று மாலை 5 கிலோ லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சராசரியாக செங்கபட்டு மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 2.9 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவையாக இருந்து வந்த நிலையில் நேற்று அந்த தேவை 4.9 கிலோ லிட்டராக அதிகரித்துள்ளது. அதிகமான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டதால் ஆக்சிஜன் வழக்கமான அளவை விட அதிகமாக தேவை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மருத்துவமனையை பொருத்தவரை 447 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே 256 பேர். கொரோனா அறிகுறிகளுடன் 191 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மட்டும் 309 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுள்ளனர். திடீர் தேவை அதிகரித்த காரணத்தால் சரியான அழுத்தத்துடன் அனைவருக்கும் ஆக்சிஜன் கொடுக்கப்படவில்லை.
ப்ரஷர் ட்ராப் என்று சொல்லக்கூடிய டெக்னிக்கல் பிரச்னை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த டெக்னிக்கல் பிரச்னை குறித்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சிர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சரியான அளவு ஆக்சிஜன் இருந்தால் பிரஷர் ட்ராப் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே செங்கல்பட்டு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்களும் இல்லை என அம்மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களே குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் இன்று போராட்டத்திலும் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இது குறித்து தெரிவித்த மருத்துவர், செங்கல்பட்டு மருத்துவமனையிலேயே மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் சில மருத்துவர்கள் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. செவிலியர்களும் போதுமான எண்ணிக்கையில் இல்லாத காரணத்தால் நோயாளிகளை சரிவர கவனிக்க முடியவில்லை என்றார். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் அளவை போதுமான தேவைக்கு இருப்பு வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.